/

சூலூர் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி

News image
Updated On :5 ஜனவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

சூலூர் அருகே ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சில மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட 27 மாணவர்களை சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில் முதலுதவிக்குப் பின் 13 மாணவர்கள் வீடு திரும்பினர். மற்ற மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தகவல் அறிந்து சல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மதிய உணவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. சுல்தான்பேட்டை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஒன்றியச் செயலாளர்கள் முத்துமாணிக்கம், ரமேஷ், சூலூர் அதிமுக எம்எல்ஏ வி.பி.கந்தசாமி, வழக்குரைஞர் பிரபு, சூலூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சுல்தான் பேட்டை காவல் ஆய்வாளர் சுவிதா மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் முகாமிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இரவு மாணவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு மேலும் 12 மாணவர்கள் வீடு திரும்பினர். எஞ்சியுள்ள 2 மாணவர்கள் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம், பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.