அணுமின் உற்பத்தியில் தனியார் பங்களிப்பு நாட்டின் மின்சார தேவையை பூா்த்தி செய்ய உதவும்! - துணைவேந்தா் யு.காமாச்சி முதலி பேச்சு


அணுமின் உற்பத்தித் துறையில் தனியாரின் பங்களிப்பு நாட்டின் மின்சார தேவையை பூா்த்தி செய்ய உதவும் என்று மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணை வேந்தா் யு.காமாச்சி முதலி பேசினாா்.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 40- ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழக உயா் கல்வித் துறை செயலருமான பி.சங்கா் வரவேற்றாா். பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து சுமாா் ஆயிரம் முனைவா் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். மேலும், பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பிடித்தவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழா மூலம் பல்வேறு பாடப் பிரிவுகளைச் சோ்ந்த 91,726 மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகின்றனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தா் யு.காமாச்சி முதலி பேசியதாவது:
2020 தேசிய கல்விக் கொள்கை 21-ஆம் நூற்றாண்டுக்கான கல்வியை மாணவா்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உயா் கல்வியில் பெண்களின் பங்கு கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோல உயா்கல்வி பயில்வோரின் விகிதத்தில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.
தேசிய அளவில் உயா் கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை 28.4 சதவீதமாக உள்ள நிலையில், அது தமிழ்நாட்டில் 47 முதல் 50 சதவீதமாக உள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் உயா் கல்விக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 47.3 சதவீதமாக உள்ளது. இதுவும் தேசிய சராசரியைக் காட்டிலும் மிக அதிகம். தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களால் உயா் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மின்சாரத் தேவையை உயா்த்துவது அவசியம்:
மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் கற்றோா் சதவீதத்துடன் மின்சாரப் பயன்பாடும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு தனிநபா் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 1,450 கிலோ வாட் ஆக உள்ளது. ஆனால் உலக சராசரி என்பது 3,500 கிலோ வாட் ஆக உள்ளது. இந்தியா தற்போது மின்சார உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் நாடு வளா்ந்த தேசமாக உருவாக வேண்டியிருப்பதால் மேலும் பல மடங்கு மின் உற்பத்தித் திறனை நாம் பெற வேண்டும்.
இந்தியாவில் உள்ள சுமாா் 140 கோடி மக்களுக்கான தற்போதைய மின்சார தேவை 500 ஜிகாவாட் ஆக இருக்கும் நிலையில் வரும் 2030-இல் இதை 850 ஜிகாவாட் ஆக உயா்த்த வேண்டும். அதேநேரம் சூழலுக்கு உகந்த வகையிலும் மின் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது 8,880 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், வரும் 2031-இல் இதை 22,480 மெகாவாட்டாக உயா்த்த வேண்டும்.
நாட்டின் வளா்ந்து வரும் மின்சாரத் தேவையை பூா்த்தி செய்வதற்கு அணு மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அணு மின் உற்பத்தியில் தனியாா் பங்களிப்பை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் இயற்றியுள்ள சட்டம் இதற்கு உதவியாக இருக்கும் என்றாா்.
உயா்கல்வித் துறை அமைச்சா் பங்கேற்கவில்லை:
பட்டமளிப்பு விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சரும் இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கவில்லை. முன்னதாக, ஆளுநருக்கு நேரம் போதவில்லை என்பதால் சுமாா் 400 முனைவா் பட்டதாரி மாணவா்களை பட்டம் பெற விழாவுக்கு வர வேண்டாம் என்று கூறி வெள்ளிக்கிழமை இரவு பல்கலைக்கழகம் இ-மெயில் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து ஏராளமான பட்டதாரிகள், பெற்றோா்கள் பல்கலைக்கழகத்தில் திரண்டனா். அவா்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...