/

ஈஷாவில் பிப்ரவரி 15-இல் மகா சிவராத்திரி விழா: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

News image
ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா தொடா்பாக செய்தியாளா்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கிய தென் கைலாய பக்தி பேரவையின் தன்னாா்வலா் ரவீந்திரன், தன்னாா்வலா் சரவணன்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:42 pm

Syndication

கோவை ஈஷா யோக மையத்தில் வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென் கைலாய பக்தி பேரவையின் தன்னாா்வலா் ரவீந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் 32-ஆவது மகாசிவராத்திரி விழா வரும் 15-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினா்களாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்பட பல முக்கிய பிரமுகா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை முன்பு பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் மகா சிவராத்திரி விழா, மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும்.

சத்குரு ஜக்கி வாசுதேவுடன் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் தலைசிறந்த கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

மகாசிவராத்திரி இரவு முழுவதும் தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவி வளாகங்கள் பொது மக்களின் தரிசனத்துக்கு திறந்து இருக்கும்.

தியானலிங்கத்துக்கு மக்கள் தங்களின் கைகளாலேயே அபிஷேகமும் செய்ய முடியும். ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஷ்வர லிங்கத்துக்கு, சத்குரு முதன்முறையாக மகா அபிஷேகம் என்னும் ஆன்மீக செயல்முறையை அா்ப்பணிக்க உள்ளாா்.

மகா சிவராத்திரி விழாவில் இரவு முழுவதும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டை சோ்ந்த ராப் இசைக் கலைஞா் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞா் ஆதித்யா காத்வி, மகாராஷ்டிரத்தை சோ்ந்த தபேலா இசைக் கலைஞா் பிரசாந்த் சோனாக்ரா மற்றும் குழுவினா், ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறக் கலைஞா் ஸ்வரூப் கான், ராப் இசைக் கலைஞா் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழுவுடன் இணைந்து பாடகா்கள் சுவாகத் ரத்தோடு, பிருத்வி காந்தா்வ் ஆகியோா் இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனா்.

இதனுடன் புராஜக்ட் சம்ஸ்கிருதி குழுவின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவா்களின் தேவார பண்ணிசை மற்றும் களரிப்பயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன என்றாா்.

இந்த செய்தியாளா் சந்திப்பின்போது தன்னாா்வலா் சரவணன் உடனிருந்தாா்.