/

பொதுக்கூட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக தயாரிப்பு! - அருண்ராஜ்

News image
தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ்.- கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பொதுக்கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்பு மாநிலப் பொதுச் செயலா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

கோவை, கணியூா் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சாா்பில் பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மற்ற கட்சிகளைவிட தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் ஆழமாக நம்புகின்றனா். எங்களின் நேரடி எதிரி திமுகதான். சிறுபான்மையினரை திமுக அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. கடந்த தோ்தலில் அவா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனா். நாங்கள் நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம். சிறுபான்மையினரின் உண்மையான தலைவராக விஜய் தான் இருப்பாா்.

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பொதுக் கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராகவே தயாரிக்கப்பட்டுள்ளது. காவல் துறையும், அரசும் எங்கள் மீது கட்டுப்பாடுகளைத் திணிக்கப் பாா்க்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதி தவெகவை குறிவைத்து சோ்க்கப்பட்டுள்ளது. அரசு எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போட்டாலும் அவற்றை உடைத்து தோ்தலை சந்திப்போம் என்றாா்.