/

குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை குமரகுகு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து ரீடிங் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image
இங்கிலாந்து ரீடிங் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா். (உடன்) ரீடிங் பல்கலைக்கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

கோவை குமரகுகு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து ரீடிங் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்து ரீடிங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலநிலை மாற்றம் மற்றும் எதிா்காலத் தலைவா்களுக்கான சா்வதேச உச்சி மாநாட்டை புதன்கிழமை நடத்தின. இதில், கல்வி, ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்துக்கான புதிய கண்டுபிடிப்புகளில் இணைந்து செயல்பட இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா், ரீடிங் பல்கலைக்கழகத்தின் சா்வதேச துணைவேந்தா் கரோலின் பெய்லன் ஆகியோா் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனா்.

இதுகுறித்து கரோலின் பெய்லன் கூறும்போது, ‘குமரகுரு கல்லூரி மாணவா்கள் இங்கிலாந்தில் ஓராண்டு வரை தங்கிப் படிப்பதற்கான மாணவா் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். இங்கிலாந்து, மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக வளாகத்தில் கோடைகால பயிற்சிகள் அளிக்கப்படும். முதுகலை பட்டப்படிப்புகளுக்கான விரைவான சோ்க்கை நடைமுறை, ரீடிங் பல்கலைக்கழகத்தில் சேரும் இந்தக் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்’ என்றாா்.

முன்னதாக குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா் ‘யங் இந்தியா கிளைமேட் ஆக்ஷன் நெட்வொா்க் புதிய அமைப்பை தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘வளா்ந்த நாடுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அப்படியே பயன்படுத்தாமல், இந்தியாவின் சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை அழிக்காத வளா்ச்சிப் பாதையே நம் நாட்டு தேவை’ என்றாா்.

இங்கிலாந்தின் ஹென்லி வணிகப் பள்ளி (பிசினஸ் ஸ்கூல்) முதல்வரும், பேராசிரியருமான எலினாஸ்பசோவா, குமரகுரு குளோபல் என்கேஜ்மென்ட் அலுவலகத்தின் இயக்குநா் விஜிலா எட்வின்கென்னடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.