/

பந்திப்பூர் பிரச்னை: மறு பரிசீலனை செய்கிறது கர்நாடக அரசு: தமிழகம், கேரளம் எதிர்ப்பு எதிரொலி

உதகை, நவ 19: தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் பகுதியில் கர்நாடக மாநில வனத்துறையின் சார்பில் தற்போது இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதை

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:11 pm

ஏ. பேட்ரிக்

உதகை, நவ 19: தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் பகுதியில் கர்நாடக மாநில வனத்துறையின் சார்பில் தற்போது இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதை மேலும் அதிகரித்து மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை மூட அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இதுதொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் பெறப்படாவிட்டால் டிசம்பர் மாதத்திலிருந்து இந்த உத்தரவு அமல்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 அதேபோல கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் முத்தங்கா வனச் சரணாலயப் பகுதியிலும் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக வனத்துறை தீர்மானித்திருந்தது.

 இந்த அறிவிப்புக்கு எதிராக தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியிலும், கர்நாடக-கேரள மாநில எல்லைப் பகுதியிலுள்ள வயநாடு மாவட்டத்திலும் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. கூடலூர் பகுதியில் இம்மாதம் 28ம்தேதி பந்த் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 கர்நாடக மாநில வனத்துறையின் இந்த புதிய அறிவிப்புக்கு தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இதை மறு பரீசீலனை செய்ய கர்நாடக மாநில அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

 இது தொடர்பாக கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர் தலைமையில் அம்மாநில வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 இந்த ஆலோசனையில் தற்போது நடைமுறையிலுள்ள இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரையிலான போக்குவரத்து தடையை தொடர்ந்து நீட்டிப்பது எனவும், புதிதாக உத்தேசிக்கப்பட்டுள்ள மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான கூடுதல் தடை நேரத்தில் வாகனங்களை தனித்தனியாக இயக்க அனுமதிக்காமல் மாநில எல்லைப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைத்து கான்வாய் போல சிறிது நேர இடைவெளிகளுக்குப் பிறகு தொடந்து இயக்க அனுமதிக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் கர்நாடகத்திலிருந்து வெளியாகவில்லை என்றாலும், கூடலூர் பகுதியில் இம்மாதம் 28ம்தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டத்திற்கு முன்னதாகவே இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகுமென கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.