நெருக்கடியில் ஜவுளித் துறை!
கோவை, மே 20: நூல் விலை வரலாறு காணாத விழ்ச்சி அடைந்திருப்பது ஒட்டுமொத்த ஜவுளித் துறையையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. உற்பத்தி செய்த நூல், ஆலைகளில் தேக்கமடைந்து வருவதையடுத்து உற்பத்தியைக் குறைக்க பஞ


கோவை, மே 20: நூல் விலை வரலாறு காணாத விழ்ச்சி அடைந்திருப்பது ஒட்டுமொத்த ஜவுளித் துறையையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
உற்பத்தி செய்த நூல், ஆலைகளில் தேக்கமடைந்து வருவதையடுத்து உற்பத்தியைக் குறைக்க பஞ்சாலைகள் முடிவு செய்திருக்கின்றன.
பஞ்சு விலையேற்றத்தால் கடும் பாதிப்பை அடைந்த நூற்பாலைகள், தற்போது நூல் விலை வீழ்ச்சியால் சிரமத்தில் தவிக்கின்றன. வேளாண்மைக்கு அடுத்ததாக அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாக ஜவுளித் துறை உள்ளது. அதிலும் நூற்பாலைகள் வேலைவாய்ப்பை அளிப்பதில் முதலிடத்தில் இருக்கின்றன. அண்மைக் காலமாக பஞ்சு மற்றும் நூல் மீதான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜவுளித் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்று நூற்பாலை சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
"கடந்த 45 நாள்களில் கிலோ நூல் 30 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதாவது கிலோ ரூ.285-ல் இருந்து ரூ.210 ஆகக் குறைந்துவிட்டது' என்கிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) செயலர் கே.செல்வராஜ்.
சர்வதேச அளவில் பஞ்சு விலை குறைந்த காரணத்தால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பஞ்சு அளவு கணிசமாகக் குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவைக்கு போதாத நிலையில் இருந்தபோது மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை தாராளமாக்கியது. இதனால் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்தது. பஞ்சு விலை மேலும் உயரும் என அறிவித்த காரணத்தால், ஏராளமான பஞ்சாலைகள் தங்களது தேவைக்கு கொள்முதல் செய்து இருப்பை அதிகப்படுத்தின.
ஒருகட்டத்தில் பேல் ஒன்று ரூ.63 ஆயிரம் வரை சென்ற பஞ்சு விலை, ஏற்றுமதி குறைந்ததும் ரூ.40 ஆயிரமாக விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது. இந்த விலை வீழ்ச்சி நூல் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நூல் விலை அதிகரித்துவிட்டது என ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தால் கடந்த ஜனவரியில் இருந்து நூல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இதில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட்ட நூல் தேக்கமடைந்தன.
இதற்கிடையே, திருப்பூர் சாய ஆலைகள் மூடப்பட்ட காரணத்தால் ஆயத்த ஆடை, பின்னலாடை உற்பத்தியாளர்களின் கொள்முதல் மாதம் 4 கோடி கிலோ நூல் அப்படியே நிறுத்தப்பட்டது. இந்தக் காரணங்களால் நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளில், 500 மில்லியன் கிலோ நூல் தேக்கமடைந்திருக்கின்றன என்கிறார் செல்வராஜ்.
சாயமேற்றும் ஆலைகள் மூடப்பட்டதால் பின்னலாடை, விசைத்தறிக்கு வழங்கப்படும் சிட்டா நூல் கொள்முதலும் குறைந்துவிட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக சிறுநூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். நூல் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட டியூட்டி டிராபேக் சலுகையை மத்திய அரசு திரும்பப் பெற்றதால் நூற்பாலைகளுக்கு ஏறத்தாழ ரூ.600 கோடி நஷ்டம்
ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் உற்பத்தி செய்த நூலையும் விற்பனை செய்ய முடியாத சூழல் நிலவுவதால் நூற்பாலைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன என்று நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்திய ஜவுளித் துறை இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையைச் சந்தித்துள்ளது. பஞ்சு, நூல் மீதான கொள்கைகளில் மத்திய அரசு உள்நாட்டு ஜவுளித்துறைக்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் இந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் ஏ.ஆர்.சின்னையன்.
இச்சூழலில், மே 23-ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், 24-ம் தேதி முதல் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியை நிறுத்தவும் நூற்பாலைகள் முடிவு செய்திருக்கின்றன. நாட்டின் மொத்த நூல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 47 சதமாக இருக்கிறது. சிறிதும், பெரிதுமாக தமிழகம் முழுவதும் 2,500 நூற்பாலைகள் இருக்கின்றன. இவற்றில் 6 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
உற்பத்தி குறைக்கப்படுவதால், தொழிலாளர்களின் வேலை நேரமும் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
"பஞ்சாலைகள் மூன்று ஷிப்ட்-களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி குறைக்கப்பட்டால், ஒரு ஷிப்ட் நிறுத்தப்படலாம். இதனால் 30 சதவீதம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது' என்கிறார் கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க (எச்எம்எஸ்) தலைவர் டி.எஸ். ராஜாமணி.
இதுதொடர்பாக விவாதிக்க பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...