பார்சன்ஸ்வே− நீர்த்தேக்கத்தில் 12 அடி தண்ணீர்
உதகை, மார்ச் 25: உதகை நகருக்கும், வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்துக்கும் குடிநீர் வழங்கும் பிரதான நீர்த்தேக்கமான பார்சன்ஸ்வேலி நீர்த் தேக்கத்தில் தற்போது 12 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதால், கடும் கு


உதகை, மார்ச் 25: உதகை நகருக்கும், வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்துக்கும் குடிநீர் வழங்கும் பிரதான நீர்த்தேக்கமான பார்சன்ஸ்வேலி நீர்த் தேக்கத்தில் தற்போது 12 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதால், கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
உதகை நகருக்கு பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரி சோலை, தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதில், பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கம்தான் மிகப் பெரியதும், பிரதானமானதாகும். அதிலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கும், உதகையைச் சுற்றியுள்ள சில கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது உதகையில் வறண்ட சூழள் நிலவுகிறது. நகர்ப் பகுதியில் மட்டும் ஓரிரு நாள்கள் மழை பெய்தது. இதனால் உதகையில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலுமே நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
பொதுவாக உதகை நகரைப் பொருத்த வரையில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் ஓரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்விச் சுற்றுலாவாக வந்துள்ளதோடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் கணிசமான அளவில் உள்ளது. இதனால் தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மின்வாரியத்தினரின் தலையாய கடமையாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு அளவுக்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்திலிருந்து காட்டுக்குப்பை மற்றும் பைக்காரா பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 35 அடியாக இருந்த பார்சன்ஸ்வேலியின் நீர்மட்டம், கடந்த வாரத்தில் 17 அடிக்கு குறைந்தது.
மின்வாரியத்தினரும், உதகை நகராட்சி நிர்வாகமும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டாலும், உதகை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக குறைந்தது 13.5 அடி தண்ணீரை விட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் கோடை மழை பெய்யும் வரை குடிநீர்த் தேவையை சமாளிக்க முடியும்.
ஆனால், தற்போது மின்வாரியத்தினர் முன்னறிவிப்பின்றி தங்களது தேவைக்காக தண்ணீரை எடுத்துக் கொண்டுள்ளதால் பார்சன்ஸ்வேலியில் 12 அடிக்கு நீóர்மட்டம் குறைந்து விட்டது. இதில், பாதியளவுக்கு சகதி சேர்ந்துவிடும் என்பதால், சுமார் 7 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. இதை வைத்துக் கொண்டு ஏப்ரல் மாதத்தின் குடிநீர்த் தேவையை சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போதுள்ள 12 அடி நீரைக் கொண்டே தினந்தோறும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், மின்வாரியத்தினர் மேலும் நீரைத் திறந்து விட்டால் உதகை நகரில் குடிநீர்ப் பஞ்சம் தவிர்க்க முடியாததாகி விடும். எனவே, நகராட்சி நிர்வாகம் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் மின்வாரியமும், உதகை நகராட்சியும் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், உதகை நகரில் மட்டுமின்றி, வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் குடிநீர் விநியோகம் என்பது கேள்விக்குறியாகி விடும்.
தேர்தல் நேரத்தில் மின் வெட்டை சமாளிப்பதாகக்கூறி, உதகையில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், உதகை நகராட்சி நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...