நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மாயார் ஆற்றை இரவில் கடக்கும் அடிமாடுகள் பெயரில் கடத்தல் தொழில்?

உதகை,மார்ச் 2: கர்நாடக மாநிலத்திலிருந்தும், ஈரோடு மாவட்டத்திலிருந்தும்  வனப் பகுதிகள் வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் இரவு வேளையில் அடிமாடுகள் வரத்து அதிகரித்துவரும் நிலையில், இதனோடு கடத்தல் தொழிலும்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:42 pm

ஏ. பேட்ரிக்

உதகை,மார்ச் 2: கர்நாடக மாநிலத்திலிருந்தும், ஈரோடு மாவட்டத்திலிருந்தும்  வனப் பகுதிகள் வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் இரவு வேளையில் அடிமாடுகள் வரத்து அதிகரித்துவரும் நிலையில், இதனோடு கடத்தல் தொழிலும் சேர்ந்துள்ளதோ என்ற ஐயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 நீலகிரி மாவட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்  பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட்டை பகுதியிலிருந்தும்

அடிமாடுகள் வருகின்றன. இவை மசினகுடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 மேட்டுப்பாளையத்திலிருந்து சாலை வழியாகவே உதகைக்கும், கூடலூருக்கும்

வாகனங்கள் மூலம் 12 அடிமாடுகள் வரை கொண்டு வரலாம். இதற்கு ஒரு மாட்டுக்கு அதிகபட்சமாக ரூ.2,000 வரை செலவாகிறது. இதற்காக இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் முறையான ரசீதுகளை காட்டி அவற்றை கொண்டு வரலாம்.

 ஆனால், அண்மைக்காலமாக மசினகுடி பகுதிக்கு அடிமாடுகள் கால்நடையாக கொண்டு வரப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையிலிருந்து அங்கலா வழியாக மாயார் ஆற்றைக் கடந்து நீலகிரி மாவட்டத்திற்குள் ஊடுருவி விடுகின்றனர்.  அதேபோல, ஈரோடு மாவட்டத்திலிருந்து தெங்குமரஹாடா வழியாக மாயார்

ஆற்றைக் கடந்து மங்கலப்பட்டி பகுதிக்கு வந்துவிடுகின்றனர். அங்கிருந்து மசினகுடி பகுதிக்கு இந்த மாடுகள் கொண்டு வரப்படுகின்றன.  பின்னர் மசினகுடி பகுதியை சேர்ந்த மாடுகள் என்ற பெயரில் வனத்துறையிடமிருந்து அனுமதிச் சீட்டு பெறப்பட்டு கேரள மாநிலத்திற்கு அதிகாரப்பூர்வமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

 கேரள மாநிலத்திற்கு மசினகுடியிலிருந்து மாடுகள் கொண்டு செல்வதற்கு ஏற்படும் செலவை விட கர்நாடக மாநிலத்திலிருந்தும், ஈரோடு மாவட்டத்திலிருந்தும் நீலகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் கொண்டு வரப்படும் செலவு மிக அதிகமாகும். இதற்காக வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோருக்கு  செலவழிக்கப்படும் தொகையும் மிக அதிகம் என்கின்றனர் இத்தொழிலில்  ஈடுபட்டுள்ளோர்.

 அதிகாரப்பூர்வமாக உரிய அனுமதியைப் பெற்று குறைந்த செலவில் அடிமாடுகளை கொண்டு வர வாய்ப்புள்ள சூழலில், மிக அதிகமாகச் செலவழித்து

வனப் பகுதிகள் வழியாக அடிமாடுகளை நீலகிரிக்குள் கடத்தி வருவது உள்நோக்கமுடையது என்ற குற்றச்சாட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.

 இதுதொடர்பாக வனத்துறையினர் ரகசியமாக விசாரணைகளை நடத்தி அடிமாடுகள் பிரச்னையில் நடப்பது என்ன என்பதை கண்டறிந்தால்தான் இப் பிரச்னைக்கு நிரந்தரத்  தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுவரும் நிலையில், நீலகிரி வடக்கு கோட்ட வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக மசினகுடி மற்றும் கூடலூர் பகுதி மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.