/

தீவிரவாதிகளின் ரசாயன உயிர்க்கொல்லி தாக்குதல்களைத் தடுக்க டி.ஆர்.டி.ஓ. ஆய்வு!

கோவை, பிப். 22: தீவிரவாதிகள் ரசாயன உயிர்க்கொல்லிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதைத் தடுப்பதற்கான செயல்முறைகளை உருவாக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டிஆர்டிஓ) ஆய்வுகளை மேற்கொண

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:36 pm

ஆர். ஆதித்தன்

கோவை, பிப். 22: தீவிரவாதிகள் ரசாயன உயிர்க்கொல்லிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதைத் தடுப்பதற்கான செயல்முறைகளை உருவாக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டிஆர்டிஓ) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

 ÷தீவிரவாதிகள் ராசாயன உயிர்க்கொல்லி ஆயுதங்களைக் கொண்டு தாக்கக்கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஏனைய உலக நாடுகளுக்கும் உண்டு. இத்தகைய ராசாயன உயிர்க்கொல்லி ஆயுதத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தடுத்து செயலிழக்கச் செய்யவும் ஒவ்வொரு நாடும் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.

 ÷அதன்படி, மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டிஆர்டிஓ) சார்பில் ராசாயன உயிர்க்கொல்லி ஆயுதங்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்தல் தொடர்பான ஆய்வுக்கு ரூ. 285 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இத்தகவலை டி.ஆர்.டி.ஓ.வின் லைப் சயின்ஸ் பிரிவின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் டபுள்யூ.செல்வமூர்த்தி தெரிவித்தார்.÷

 ÷அண்மையில் கோவை வந்த டபுள்யூ.செல்வமூர்த்தி நமது நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

 ÷ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் சார்பில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற வசதிகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தித் தயாரித்து வழங்கி வருகிறோம்.

 ÷நானோ தொழில்நுட்பம் மூலம் ராணுவத்தினருக்குத் தேவையான உபகரணங்களை தயாரித்து வருகிறோம். அதன்படி உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 ÷அந்த வகையில், நுரையீரலில் ரத்த நாளங்களில் ஏற்படும் சுவாசக் கோளாறு தொடர்பான உயர் ரத்தஅழுத்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நவீன "இன்ஹேலர்' தயாரித்துள்ளோம். இது நுரையீரல் கோளாறால் அவதியுறும் நோயாளிகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது.

 தீவிரவாதிகளை திணறடிக்கும் நவீன மிளகாய்ப் பொடி கையெறி குண்டு: ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மிளகாய்ப் பொடியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நவீன கையெறி குண்டுகளை வழங்கியுள்ளோம்.

 ÷பதுங்குகுழி உள்ளிட்ட இடங்களில் மறைந்துள்ள எதிரிகளை உயிரோடு பிடிக்க இந்த கையெறி குண்டுகள் பயன்படும். ராணுவ வீரர்களால் வீசப்படும் இந்த கையெறி குண்டில் இருந்து வெளியேறும் புகை கண் எரிச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தி, எதிரிகளை திணறிடிக்கும். அவர்களை கொல்லாமல் உயிரோடு பிடிக்க இது உதவும்.

 ÷இம்மாதிரியான கையெறி குண்டுகளை 10 ஆயிரம் யூனிட்களை வாங்க ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது. அதுபோல சிஆர்பிஎஃப், பி.எஸ்.எஃப்., ஐ.டி.பி.பி., உள்ளிட்ட துணை ராணுவப் பிரிவினர் ஒரு லட்சம் யூனிட்களை கொள்முதல் செய்ய ஆர்டர் செய்துள்ளனர்.

 ராசாயன உயிர்க்கொல்லி ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய ரூ. 285 கோடி: 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ராசாயன அணு ஆயுதங்களை திறம்படக் கண்டறிதல், பாதுகாத்தல், செயலிழக்கச் செய்தல், மருத்துவ உதவி போன்ற ஆய்வுப் பணிகளுக்கு ரூ. 285 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

 ÷நானோ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் சாதனங்களைக் கொண்டு ஏவுகணைகளின் வேகத்தை மிக துல்லியமாகச் செலுத்த ஆய்வு செய்து வருகிறோம். மேலும், இலகு ரக விமானங்களிலும் நானோ உபகரணங்களைப் பயன்படுத்த உள்ளோம்.

 ÷இதுதவிர நீர்மூழ்கி கப்பல்களின் வெளிப்பகுதி சேதமடையாமல் இருக்கவும் நானோ கோட்டிங் தர உள்ளோம். கடற்படையின் அனைத்து கப்பல்களுக்கும் இது பயன்படுத்தப்படும்.

 ரூ. 4,000 கோடி நிதி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் லைப் சயின்ஸ் பிரிவு மூலம் பல்வேறு ஆய்வுப் பணிகளுக்காக 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 4,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2-வது கட்ட ஆய்வுக்கு ரூ. 30 கோடி நிதி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ. ஆராய்ச்சி மையம் சார்பில் போர் வீரர்களுக்கான தேவையான வசதிகளை கண்டறிதல், ரசாயன தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவும் நவீன வசதிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ÷அதேபோல மைனஸ் டிகிரியில் பனி படர்ந்த பகுதிகளில் எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சத்தான உணவுகளை தயாரித்தல், நவீன உடைகளை தயாரித்து வழங்குதல் உள்ளிட்டவையும் நடந்து வருகின்றன.÷முதல்கட்டமாக இந்த மையத்துக்கு ரூ. 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட ஆய்வுப் பணிகளுக்காக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என்றார் செல்வமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.