நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அரசு நிதியுதவி கிடைப்பது எப்போது?

கோவை, பிப். 17: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், அரசின் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:32 pm

ஆர். ஆதித்தன்

கோவை, பிப். 17: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், அரசின் நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கென இலவச பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 2010-ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா ஐ.ஏ.எஸ். இலவச தேர்வு மையம் தொடங்கப்பட்டது.

இந்த மையத்தில் முதல்நிலைத் தேர்வாக (பிரிலிமினரி) எழுத்துத் தேர்வு வைத்து, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தேர்வெழுதிய 1,500 பேரில் 100 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி கடந்த டிசம்பர் மாதம் முதல் நடத்தப்பட்டு

வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் சுமார் 50 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் இலவசமாக தங்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மாதந்தோறும் உணவுச் செலவுக்கென ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 800 வழங்கப்படுகிறது. ஆனால், உணவுச் செலவுக்கு அளிக்கப்படும் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உணவுச் செலவுக்கான கட்டணத்தை உயர்த்திக் கொடுக்கும்படி பயிற்சி மைய அதிகாரிகளிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் போதிய நிதி இல்லாததால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கேன்டீன் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கியபோது, ஒவ்வொரு மாணவருக்கும் மாதத்துக்கு ரூ. 1,600 செலவானது. இதனால், கேன்டீன் மூலம் உணவு வழங்குவதை பயிற்சி மையம் நிறுத்திவிட்டது. இப்போது உணவுச் செலவுக்கான பணத்தை மட்டும் வழங்கி வருவதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

ரூ. 10 லட்சம் நிதி கோரல்: சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில் இந்த மையத்திற்கு ரூ. ஒரு லட்சம் வரை நிதி வழங்கப்பட்டுள்ளது. போதிய நிதி இதுவரை பெறப்படாததால், பல்கலைக்கழகத்திடம் இருந்து முன்பணம் பெற்று பயிற்சி மைய ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் மாணவர்களுக்கு உணவுச் செலவு உள்ளிட்ட தேவைகளுக்குச் செலவிடப்படுகிறது.

இதனால் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், அரசு நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பயிற்சி மையம் சார்பில், அண்ணா மேலாண்மை நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் நிதி கோரப்பட்டுள்ளது. இந்த நிதி விரைவில் கிடைக்கும் என்று பயிற்சி மைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

விடுதியில் நெருக்கடி: ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படிக்கும் 50 பேர் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு போதிய விடுதி வசதி இல்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.

இது குறித்து, பாரதியார் பல்கலைக்கழக அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் பத்மநாபன் கூறியது:

சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பி.இ., எம்.பி.ஏ., மற்றும் இளநிலை பட்டப் படிப்புகளை படித்தவர்கள் ஆர்வமாகச் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கிறோம்.

ஐ.ஏ.எஸ். படிப்போருக்காக தனி நூலகம் நிறுவுவதற்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த நிதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்கு முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற அனுப்பி வைக்கப்படுவர்.

ஐ.ஏ.எஸ். படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களை சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம். அதேநேரத்தில், பள்ளிப் படிப்பின்போதே மாணவர்கள் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

இதன்மூலம் வருங்காலங்களில் மாணவர்கள் சாஃப்ட்வேர் துறையை விட்டுவிட்டு, சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு விரும்பும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.