/

முதுமலை புலிகள் காப்பகப் பகுதி விடிய விடிய அவதியுறும் 3 மாநில பயணிகள்!

உதகை, பிப்.1: முதுமலை புலிகள் காப்பகம் வழியான போக்குவரத்து, அரசு உத்தரவை மீறி இரவு 9 மணிக்கே தடை செய்யப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ÷ உதகையிலிருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:20 pm

ஏ. பேட்ரிக்

உதகை, பிப்.1: முதுமலை புலிகள் காப்பகம் வழியான போக்குவரத்து, அரசு உத்தரவை மீறி இரவு 9 மணிக்கே தடை செய்யப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

÷ உதகையிலிருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு, முதுமலை மற்றும் பந்திப்பூர் வனச் சரணாலயங்கள் வழியாக தமிழக-கர்நாடக எல்லையான கக்கநள்ளா சோதனைச்சாவடி வரை செல்லும் ஒரு சாலையிலும், கூடலூரிலிருந்து தொரப்பள்ளி, தெப்பக்காடு வழியாக கக்கநள்ளா சோதனைச்சாவடி வரை செல்லும் மற்றொரு சாலையிலும் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்தால் வன உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக இரு மாநில சுற்றுச்சூழல் அமைப்பினர் புகார் கூறி வந்தனர்.

  இந்நிலையில், இச் சாலையில் இரவு நேரப் போக்குவரத்தை தடை செய்வதாக கர்நாடக மாநில அரசின் சார்பில் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்த அறிவிப்பால் இரவு நேரத்தில் இரு மாநில பொதுமக்களும் வெகுவாகப்  பாதிக்கப்படுவர் என பல்வேறு தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

÷அதையடுத்து, இரு மாநிலங்களிலிருந்தும் இரவு நேரத்தில் தலா இரண்டுó அரசுப்  பேருந்துகளை இயக்கலாம் எனவும் இதைத்தவிர மற்ற எந்த வாகனமும் இயக்கப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இச்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

÷ ஆனால், இந்த உத்தரவை தொரப்பள்ளியிலுள்ள தமிழக அரசின் வனத்துறை சோதனைச் சாவடியில் நடைமுறைப்படுத்துவது இல்லையென புகார் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் 9 மணிக்கே சாலை மூடப்படுவதாகவும், இதனால், தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் தெப்பக்காடு வழியாக கர்நாடகத்துக்குச்  செல்வோர் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். சரக்கு வாகனங்களும் அனுமதிக்கப்படாததால் சரக்குப் போக்குவரத்திலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

÷ தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்தாமல் வனத் துறையினர் செயல்படுவதால், கர்நாடக மாநிலத்திலும் கக்கநள்ளா சோதனைச் சாவடியில் இரவு 9 மணிக்கே சாலையை அடைத்து விடுவதாகக் கூறப்படுகிறது.

÷இதனால், வேறு வழியின்றி இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் இவ்விரு சோதனைச் சாவடிகளின் அருகிலேயே இரவு 9 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்தே பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.

   இவ்விரு சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தங்குமிட வசதிகளோ, உணவகங்களோ அல்லது கழிவறை வசதிகளோ இல்லை. இதனால் பெண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 எனவே, கக்கநள்ளா மற்றும் தொரப்பள்ளி சோதனைச் சாவடிகள் மூடப்படும் நேரம் இரவு 9 மணியா அல்லது 10 மணியா என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். அத்துடன் தமிழக அரசின் வனத்துறை சோதனைச்சாவடி இரவு 9 மணிக்கே மூடப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.