/

ஆங்கிலேயர் சட்டத்தால் அவதிப்படும் விவசாயிகள்

ராசிபுரம், அக். 4:   நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விளை நிலங்களுக்கு பட்டா கிடைக்காமல் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:46 pm

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

ராசிபுரம், அக். 4:   நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விளை நிலங்களுக்கு பட்டா கிடைக்காமல் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

÷நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கார்கூடல்பட்டி, கப்பலூத்து, நாரைக்கிணறு, மத்துருட்டு, மங்களபுரம் போன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காலங்காலமாக பயனற்று கிடந்த அரசு புறம்போக்கு நிலம், பண்படுத்தப்பட்டு  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் சிறு, குறு விவசாயிகள்.

÷மலைப்பாங்கான சூழல் கொண்ட இப்பகுதியில் குன்றுகள், பாறைகளை சீரமைத்த இவர்களது முன்னோர்கள் படிப்படியாக இப்பகுதியில் குடியேறி வாழை, தென்னை, பாக்கு, மரவள்ளி, சோளம், மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இங்கு வசிக்கும் விவசாயிகள் பலருக்கு குடும்ப அட்டை, மின் இணைப்பு, வாக்காளர் அட்டை, நிலவரி, வீட்டு வரி இருந்தும் இதுவரை இவர்களது விளை நிலங்களுக்கு பட்டா மட்டும் வழங்கப்படவில்லை.

எட்டாத தூரத்தில் அரசின் சலுகைகள்: பட்டா, அடங்கல் போன்ற வருவாய்த்துறையின் முக்கிய ஆவணங்கள் இவர்களுக்கு ஏதும் இல்லாததால், இது போன்ற நிலங்களில் விவசாயம் செய்துவரும் விவசாயிகள், அரசின் இலவச விவசாய மின் இணைப்பு, கூட்டுறவுக்  கடன் மற்றும் மானியம், அரசின் கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு, விவசாயத்துறை சலுகைகள், உழவர் சந்தையில் விற்பனை உரிமம் போன்ற எதையும் பெற முடியவில்லை. இதற்காக பலமுறை போராடியும், இவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

÷இந்தப் பகுதி தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ன் கீழ் வருவதால், வனத்துறைக்கு சொந்தமான இதற்கு பட்டா வழங்க முடியாது எனக் கூறப்படுகிறது.

பிரச்னைக்குண்டான பகுதி வனச்சட்டத்தின் கீழ் இல்லை என அரசின் பல்வேறு  கடிதப் போக்குவரத்துகள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் இந்த நிலத்தை அவர்களுக்கு கொடுக்கலாம் என பல அதிகாரிகளின் பரிந்துரையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் இருந்தும் இதனை நடைமுறைப்படுத்த அரசு இதுவரை முன்வரவில்லை.

ஆங்கிலேயர் காலத்து சட்டம்: ஆங்கிலேயர் காலத்து நிலம் தடைச் சட்டத்தின் கீழ் இப்பகுதிகள் வருவதால், இப்பகுதி விவசாயிகள் பட்டா பெற முடியவில்லை. வருவாய்த்துறை, நிலஅளவைத்துறை, நிலத் தீர்ப்பாயம், வனத்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு துறைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், இவர்களுக்கு பட்டா வழங்குவதில் மிகுந்த சிக்கல் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 2 ஏக்கர் இலவச நிலம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் இவர்களுக்கு நிலம் கிடைத்தபாடில்லை. இந்த நிலத்திற்கு பட்டா வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்பதால், இப்பகுதி விவசாயிகளின் பிரச்னையில் அரசு தலையிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.