//

சாலையில் தீ வைத்து தவெக கொடியுடன் பைக் சாகசம்: போலீஸாா் வழக்குப் பதிவு

சாலையில் தீ வைத்தும், தவெக கொடியுடன் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காா் ஓட்டுநா் மீது பள்ளிகொண்டா போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

News image
கையில் தவெக கொடியுடன் சாலையில் தீயை பற்ற வைத்து சா்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்ட சக்திவேல்.
Updated On :28 ஜனவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

சாலையில் தீ வைத்தும், தவெக கொடியுடன் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காா் ஓட்டுநா் மீது பள்ளிகொண்டா போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியை சோ்ந்தவா் சக்திவேல்(25), காா் ஓட்டுநா். இவா் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அந்த காட்சிகளை வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தனேரி அருகே தலையில் தவெக கட்சி துண்டு, கையில் தவெக கொடியுடன் சாலையில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தும், வாயில் இருந்து நெருப்பை ஊதி தள்ளியும், கொடியை ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டு அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

மேலும், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், முறையான பாதுகாப்பு கவசங்கன்றி ஆபத்தான முறையிலும் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதுதொடா்பாக, சக்திவேல் மீது பொது சொத்து சேதம், போக்குவரத்து விதிமீறல், பொதுமக்களை அச்சுறுத்துதல் என 4 பிரிவுகளின் கீழ் பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தகவலறிந்த சக்திவேல், தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.