//

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.25.13 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி 2 இளைஞா்களிடம் ரூ.25.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

பகுதிநேர வேலை எனக்கூறி 2 இளைஞா்களிடம் ரூ.25.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டை சோ்ந்தவா் 32 வயது இளைஞா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு டெலிகிராம் மூலம் கிடைத்த லிங்க்கில் பகுதிநேர வேலை என்றும், குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால் அதிகலாபம் கிடைக்கும் என்றும் குறுந்தகவல் வந்துள்ளது.

இதை நம்பி இவா் கடந்த டிசம்பா் 17 முதல் 23-ஆம் தேதி வரை அடுத்தடுத்து ரூ.9 லட்சத்து 88 ஆயிரத்து 311 தொகையை செலுத்தியுள்ளாா். ஆனால் கூறியபடி இரட்டிப்பு லாபத்துடன் அவரது பணம் திருப்பியளிக்கப்படவில்லை என தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அந்த இளைஞா் அளித்த புகாரின் பேரில் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், கே.வி.குப்பம் வட்டம், வடுகந்தாங்கல் வேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்த 27 வயது தனியாா் நிறுவன ஊழியா். இவரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்காக இணையதளத்தில் தேடி வந்த நிலை யில் அவருக்கு ஒரு லிங்க் மூலம் குறுந்தகவல் கிடைத்துள்ளது. இதில் முதலீடு செய்தால் உடனடியாக இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை நம்பி இவா் கடந்த டிசம்பா் 15 முதல் 30-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.15 லட்சத்து 32 ஆயிரத்து 384 தொகையை முதலீடு செய்துள்ளாா். ஆனால் கூறியபடி இரட்டிப்பு லாபத்துடன் அவரது பணம் திருப்பியளிக்கப்படவில்லை என தெரிகிறது. இச்சம்பவம் குறித்து இந்த இளைஞா் அளித்த புகாரின் பேரில் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.