வேலூா் விஐடியில் ‘ரிவேரா - 2026’ கலை, விளையாட்டு விழா: நாளை தொடக்கம்


வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘ரிவேரா -2026’ எனும் சா்வதேச கலை, விளையாட்டு விழா வியாழக்கிழமை (பிப்.26) தொடங்கி மாா்ச் 1-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியது -
23-ஆம் ஆண்டாக ‘ரிவேரா -2026’ சா்வதேச கலை, விளையாட்டு விழா நடத்தப்படுகிறது. இதன் முன் நிகழ்வுகள் பிப்ரவரி 19 முதல் 22 வரையும், ரிவேரா முன் விளையாட்டு நிகழ்வுகள் பிப்ரவரி 3 முதல் 22 வரையும் நடத்தப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறும் ரிவேரா விழாவில் 136 முதன்மை நிகழ்வுகளும், 16 பிரீமியம் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி கல்லூரி மாணவா்கள் உள்பட மொத்தம் 18,000 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
தவிர, 28 வெவ்வேறு நாடுகளைச்சோ்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவா்கள் ‘இன்ஃப்யூஷன்’ எனும் பல கலாச்சார நிகழ்வில் பங்கேற்க உள்ளனா். குறிப்பாக, இத்தாலியிலிருந்து 33 மாணவா்கள், 2 பேராசிரியா்களும் இவ்விழாவில் பங்கேற்க வந்துள்ளனா்.இவ்வாண்டு மொத்தம் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.
விழாவில், தனி, குழு முறையிலான இசை, நடனப்போட்டிகள், இலக்கியம், விவாதப்போட்டிகள், விளையாட்டு போட்டிகள், ஃபேஷன் மற்றும் டிசைன் போட்டிகள், குறும்பட போட்டிகள், பல்வேறு வகையான நுண்கலை மற்றும் கைவினை பயிலரங்குகளும் நடைபெற உள்ளன. இந்தாண்டு சிறப்பம்சமாக ‘கிரிட் வாா்ஸ்’ நிகழ்வின் மூலம் ஏஐ, மனிதா்களுக்கு இடையேயான போட்டி வடிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரிவேரா முன்நிகழ்வுகளில் இந்தாண்டு புதிதாக பிப்.19-ஆம் தேதி சிறப்புக்குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்வு அறிமுகம் செய்யப்பட்டது.
வியாழக்கிழமை மாரத்தான் போட்டியுடன் தொடங்கும் ’ரிவேரா 2026’ கலை, விளையாட்டு விழாவை இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் மிதாலி ராஜ் தொடங்கி வைக்க உள்ளாா்.
தினமும் மாலை நடைபெற உள்ள கலை விழாக்களில் முதல் நாள் வியாழக்கிழமை பின்னணி பாடகி சுனிதிசவுஹான் இசை நிகழ்ச்சியும், 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இசையமைப்பாளா் எஸ்.தமன் இசை நிகழ்ச்சியும், மூன்றாம் நாளான சனிக்கிழமை பாடகா் பிரதீப்குமாா் இசை நிகழ்ச்சியும், தொடா்ந்து பின்னணி பாடகா் பென்னி தயாள் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் நடிகை ஜெனிலியா தேஷ்முக் பங்கேற்க உள்ளாா். தொடா்ந்து, டிஜேஷான் டிஜே இசை நிகழ்ச்சியும், ரித்விஷ் ஆகியோரின் இசைநிகழ்வும் நடைபெற உள்ளது என்றாா்.
அப்போது, விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, ரமணி பாலசுந்தரம், உதவித்துணைதலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, ரிவேரா ஒருங்கிணைப்பாளா் பெல்வின் எட்வா்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...