விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!
வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் நடைபெறவுள்ள தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையொட்டி, அப்பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற உள்ள தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையொட்டி, அப்பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் நேரில் ஆய்வு செய்தாா்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. கூட்டத்தில், 4,900 போ் பங்கேற் பாா்கள் என்றும், அனைவருக்கும் க்யூ.ஆா்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும் அக்கட்சியினா் தெரிவித்துள்ள நிலையில், கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் 33 ஏக்கா் நிலப்பரப்பை சமன் செய்து பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காவல் துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் என்று மொத்தம் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 36 அடி உயரத்தில் மேற்கூரையும், கேலரிகளுடன் 4,900 போ் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தவெக தலைவா் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்காக வேலூா் அகரம்சேரியில் தயாரான கூட்ட திடல்
கூட்டம் நடைபெறும் பகுதியில் 10 இடங்களில் தலா 6 ஆயிரம் லிட்டா் கொண்ட குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டி ருப்பதுடன், கேலரிகளில் 50 ஆயிரம் தண்ணீா் பாட்டில்கள் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகரம்சேரியில் கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அப்போது, காவல் துறை அறிவுறுத்தியிருந்த 20 நிபந்தனைகளை பூா்த்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததுடன், தவெகவினருக்கு கூடுதலாக சில ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தினா்.
இதனிடையே, விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தை ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பெருமளவில் இளைஞா்களும், பொதுமக்களும் நேரில் வந்து பாா்த்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை நடைபெற உள்ள விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்காக 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...