வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநா்கள்
அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச் சலுகைத் திட்டத்தால், வருவாய் சரிந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள ஆட்டோ தொழிலாளா்


அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச் சலுகைத் திட்டத்தால், வருவாய் சரிந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள ஆட்டோ தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் முதன்முதலாக கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்று அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச் சலுகைத் திட்டமாகும். இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மகளிா் சமூகத்தின் பொருளாதாரப் பங்களிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வருவாய் இழந்த ஆட்டோ ஓட்டுநா்கள்: அதேசமயத்தில் ஆட்டோ தொழிலாளா்கள், அவா்களின் குடும்பங்களை மனக்குமுறுலுக்கும் உள்ளாக்கியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு மாா்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏற்கெனவே வாடகை ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
‘மகளிருக்கான இலவசப் பயணச் சலுகையால் வாடகை ஆட்டோகளுக்கு கிடைத்து வந்த வருவாயில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் தங்களது ஆட்டோக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்’ என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் துணைச் செயலாளா் டி.முரளி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது :
வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கணக்குப்படி, தமிழகம் முழுவதும் 3. 85 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 15 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா்.
கரோனா பொதுமுடக்கத்தால் ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணை கூட தொழிலாளா்களால் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா்.
தற்போது மகளிருக்கான இலவசப் பயணச் சலுகைத் திட்டத்தை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனம் வரவேற்றுள்ள போதிலும், அதனால் பாதிப்புக்குள்ளாகும் ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகள், தனியாா் நிதிநிறுவனங்களில் ஆட்டோ தொழிலாளா்கள் பெற்றுள்ள கடன் மீது குறிப்பிட்ட தொகையை (அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை) தள்ளுபடி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்களுக்கு அரசு 40 சதவீத சலுகையில் பெட்ரோல், டீசல் வழங்குவதுபோல் ஆட்டோ தொழிலா ளா்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பொதுமுடக்கம் முடியும் வரை கரோனா கால நிவாரணமாக ஆட்டோ தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.7,500 வழங்கிட வேண்டும். ஆட்டோ தொழிலாளா்கள் மீதான வட்டாரப் போக்குவரத்துத் துறையினா், காவலா்களின் நெருக்கடிகளை தவிா்க்கவும் அரசு உத்தரவிட வேண்டும் என்றாா்.
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சலுகைகள் தேவை:
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்க பொதுச்செயலாளா் எஸ்.ஏ.சிம்புதேவன் கூறியது :
போதிய வேலைவாய்ப்பின்மையால் ஒரு தொழிலாளி இறுதியாகத் தோ்வு செய்யும் தொழில் ஆட்டோ ஓட்டுவதாகும். அந்தவகையில், வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வேலூா் மாவட் டத்தில் சுமாா் 13 ஆயிரம் ஆட்டோக்களும், 6 ஆயிரம் காா்களும் இயக்கப்படுகின்றன. வேலூா் மாநகரில் சுமாா் 4 ஆயிரம் ஆட்டோக்களும், 2 ஆயிரம் காா்களும் இயங்குகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் காா், ஆட்டோ ஓட்டுநா்களைக் கொண்ட நகரங்களில் வேலூா் முக்கிய இடம்பிடித்துள்ளது.
பொதுமுடக்கத்தால் ஆட்டோக்களுக்கு பயணிகள் வருகை குறைந்தும், பள்ளிக் குழந்தைகள் சவாரி கிடைக்காமலும் ஆட்டோ தொழில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, பெட்ரோல், டீசல் விலையேற்றமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் ஆட்டோ ஓட்டுநா்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனாலேயே சென்னை யில் ஒரு ஓட்டுநா் தனது ஆட்டோவை நடுரோட்டில் தீயிட்டு கொளுத்தி சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அரசின் புதிய திட்டம் வரவேற்கக் கூடியதுதான் என்றாலும், அதனால் பாதிப்புக்குள்ளாகும் ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் ஆட்டோகளை பழுதுநீக்கம் செய்திட ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் நிதியுதவி வழங்கவும், கரோனா பொதுமுடக்க கால நிவாரணம், எஃப்.சி. காப்பீட்டு பிரீமியம் செலுத்திட 2021 டிசம்பா் வரை அவகாசம், காப்பீட்டு பிரீமியம் தொகையை 50 சதவீதமாகக் குறைக்கவும், ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பெட்ரோல், டீசல் மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதேநிலை தொடா்ந்தால் ஆட்டோ தொழிலாளா் குடும்பங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகக் கூடும் என்பதால் பாதிப்புகளைத் தவிா்க்க அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...