வாலாஜாப்பேட்டை முன்மாதிரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
தமிழகத்திலேயே முதன் முதலாகத் துவங்கப்பட்ட நகராட்சி என்ற பெருமை மிக்க வாலாஜாபேட்டை, தமிழகத்தின் முன்மாதிரி நகராட்சியாகத் தரம்


தமிழகத்திலேயே முதன் முதலாகத் துவங்கப்பட்ட நகராட்சி என்ற பெருமை மிக்க வாலாஜாபேட்டை, தமிழகத்தின் முன்மாதிரி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா என நகர மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாஜாபேட்டை நகரம். ஆங்கிலேயர் காலத்தில் புதுச்சேரி நகரை நிர்மாணம் செய்த பொறியாளர்தான் இந்நகரையும் நிர்மாணம் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. தென்னிந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை 1856-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 162 ஆண்டுகளைக் கடந்துள்ளது. வாலாஜாபேட்டை 1866-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமைக்குரியது.
1920-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தின் பெருமைக்குரிய பட்டு நெசவுத்தொழிலின் கிளை வாலாஜாவில் துவங்கப்பட்டது. இங்கு நெய்யப்படும் பட்டுச் சேலைகள், கம்பளி உள்ளிட்ட துணி வகைகள் மிகவும் புகழ்பெற்றவை.
இரண்டாம் நிலை நகராட்சியான வாலாஜாபேட்டையின் பரப்பளவு சுமார் 2.64 சதுர கி.மீ., மொத்தம் 25 வார்டுகள். கடந்த 2,011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 32 ஆயிரத்து 397 பேர் வசிக்கின்றனர்.
வாலாஜாபேட்டையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, வட்டாட்சியர், சார்-பதிவாளர் அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், தினசரி காய்கறி சந்தை, உணவுப் பொருள் பாதுகாப்புக் கிடங்கு, நூலகம், அரசு பெண்கள் கலைக் கல்லூரி, தொழிற்சாலைகள் இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
வேலூரை உள்ளடக்கிய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகராக சித்தூர் இருந்தபோது வாலாஜாபேட்டை மிகப்பெரிய வணிக நகரமாக இருந்தது. வாலாஜா நகரில் பாக்கு, வெல்லம், தேங்காய், பஞ்சு, வாழை, அரிசி, உணவு தானிய மண்டிகள் இங்கு அதிகமாக இருந்தன. அதைத் தொடர்ந்து வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம்' என்று மாற்றப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்டமாக மாறிய பின்னர் முக்கிய அரசு அலுவலகங்கள், மண்டிகள் வேலூருக்கு மாற்றப்பட்டன.
வாலாஜாபேட்டை நகரைச் சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் வாலாஜாபேட்டை வந்து வேலூர், சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரு, சித்தூர், சோளிங்கர், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கல்வி, வேலை, வியாபாரத்துக்காகப் பயணம் செய்கின்றனர்.
வாலாஜாப்பேட்டை நகராட்சியை தமிழகத்தின் முன்மாதிரி நகராட்சியாக மாற்ற எந்த அரசும் இதுவரை முயற்சி எடுக்கவில்லை என நகர மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட முதல் நகரம் தற்போது சாலை, கழிவுநீர்க் கால்வாய், பொது பயன்பாட்டு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நகரில் மக்கள் பயன்பாட்டில் இருந்த நல்ல தண்ணீர் குளம் வாலாஜாபேட்டை நகராட்சி, வன்னிவேடு கிராம ஊராட்சி எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள சின்ன ஏரி எனும் நன்னீர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் தேங்கி நோய்களை உருவாக்கும் கூடங்களாக மாறி விட்டன.
நகரப் பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. பேருந்து நிலையத்தில் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் உள்ளிட்ட மிக, மிக அத்தியாவசியமான அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை.
பயணிகளின் நலன் கருதி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புதை சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், நவீன மின் தகன மேடை உள்ளிட்டவற்றுக்கான எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தவில்லை என்று தெரிகிறது. இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலாஜாபேட்டை மக்கள் கோரியுள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வாலாஜாபேட்டை தாலுகா அலுவலகத்திலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி புதிய அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையின் இரண்டுபுறமும் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுரங்க வழிப்பாதை அமைக்க வேண்டும்.
நகரின் தூய்மையைக் கெடுக்கும் விதமாக உள்ள குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. நகரின் பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாபேட்டை நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாகத் தரம் உயர்த்திப் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
இது தொடர்பாக நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருக்கின்றனர். முடிவு அரசின் கையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...