தமிழக ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தேசிய நெடுஞ்சாலைகளில் காட்சிப் பொருளாகும் எஸ்ஓஎஸ் சாதனம்
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அல்லது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள


தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அல்லது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஓ.எஸ். என்ற உயிர் காக்கும் சாதனம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் காட்சிப் பொருளாக மாறி வருகிறது.
நாடு முழுவதும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு மற்றும் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டன. அதன்படி வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர் வழியாகச் செல்லும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ராணிப்பேட்டை, சித்தூர் வழியாக செல்லும் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் குறைந்த பட்சம், 80 முதல் 100 கி.மீ., அதிகபட்சமாக 150 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லும். இதனால் அதிக அளவு விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் சிக்குவோர் 108 அல்லது 100 என்ற உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிப்பதன்பேரில் ஆம்புலன்ஸ் அல்லது மீட்பு வாகனங்கள் வரும். இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஆறு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் எஸ்.ஓ.எஸ். என்ற இலவச தொலைத் தொடர்பு சாதனம் பொருத்த கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 2 கி.மீ. தொலைவுக்கும் சாலையின் இருபுறமும் மஞ்சள் நிறத்தில் எஸ். ஓ.எஸ். என்ற தகவல் தொடர்பு சாதனங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடி அருகில் இருந்து கிருஷ்ணகிரி வரை சாலையின் இருபுறமும் 2 கி.மீ. தொலைவுக்கு ஒரு எஸ்.ஓ.எஸ். சாதனம் என தலா 70 வீதம் மொத்தம் 140 சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மையக் கட்டுப்பாட்டு அறைகள் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் இயங்கும் விதத்தில் பணியாளர்கள் மூன்று சுற்றுகளாக பணியில் இருப்பார்கள்.
விபத்துகள் ஏற்பட்டால் இந்த சாதனத்தின் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் சிக்னல் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவருக்கு தகவல் கிடைக்கும். இதையடுத்து சில நிமிடங்களிலேயே 108 ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
எந்த எஸ்.ஓ.எஸ். சாதனத்தில் இருந்து பேசுகிறோமோ, அந்த இடத்தை அறியும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விபத்து நடந்த இடத்தைக் குறிப்பிட்டு சொல்லத் தேவையில்லை. இந்த எஸ்.ஓ.எஸ். சாதனம் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தானாகவே தகவல் சென்று, 108 ஆம்புலன்ஸ் அல்லது மீட்புக் குழு வரும் வகையில் செயற்கைக்கோள் உதவியுடன் எஸ்.ஓ.எஸ். சாதனம் அமைக்க உள்ளதாகவும், இதனால் விபத்துகள் நடந்தாலும், உயிர்ச் சேதம் வெகுவாகக் குறைக்க முடியும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் இருந்து கிருஷ்ணகிரி வரை ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஓ.எஸ். சாதனத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழக வாகன ஓட்டிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், காட்சிப் பொருளாக மாறி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதே தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் கர்நாடக மாநில வாகன ஓட்டிகளிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள காரணத்தால் வழியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக எஸ்.ஓ.எஸ். சாதனம் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிப்பதாக கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புப் பணியில் இருப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக வாகன ஓட்டிகளிடையே போதிய வழிப்புணர்வு இல்லை என்றும், சிலர் பொழுபோக்குக்காக எஸ்.ஓ.எஸ். சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கேலி, கிண்டல் பேசுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
எனவே, இச்சாதனத்தின் முக்கியத்துவம் தொடர்பாக வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...