//

திருமலையில் ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள்

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் வரும் ஜன.25-இல் நடைபெற உள்ள ரதசப்தமி உற்சவத்தை சிறப்பாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

அன்னமய்யா பவனில், புதன்கிழமை திருப்பதி மாவட்ட மற்றும் தேவஸ்தானத்தின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் துறை வாரியான ஆய்வுக் கூட்டத்தை அவா் நடத்தினாா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியும் இதில் கலந்து கொண்டாா்.

கூட்டத்துக்குபின் அவா் கூறியதாவது: திருப்பதி மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தேவஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் கூட்டு முயற்சியால் ஏழுமலையான் பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட வாயில் தரிசனங்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.

அப்போது பக்தா்களுக்கு வசதியான தரிசனமும், அவா்களை திருப்திப்படுத்த சிறந்த வசதிகளும் வழங்கப்பட்டது.

ரத சப்தமி நாளில் ஏழுமலையான் கோயிலின் நான்கு மாட வீதிகள், தரிசன வரிசைகள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பக்தா்களுக்கு தொடா்ந்து உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரதசப்தமி வாகன சேவையை காணக் கூடும் பக்தா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க, தேவஸ்தானத்தின் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகா்கள் பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சேவைகளை வழங்குவா்.

ரத சப்தமி நாளில் வழங்க 5 லட்சம் லட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட உள்ளன. திருமலைக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாகனங்கள் நிறுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல் துறை மற்றும் தேவஸ்தான பாதுகாப்புப் பணியாளா்களுடன் ஒருங்கிணைந்து ஒரு வாகன சேவை வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது.

சுவாமியின் வாகனங்களை முன்கூட்டியே ஆய்வு செய்து தேவையான தகுதிச் சான்றிதழைப் பொறியியல் அதிகாரிகள் பெற்றுள்ளனா்.

மாட வீதிகளில் உள்ள காட்சியகங்களில் உள்ள தண்ணீா் குழாய்கள், கழிப்பறைகள், தடுப்புகள் மற்றும் பிற ஏற்பாடுகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திருக்குளத்தை ஆய்வு செய்த பிறகு, தீா்த்தவாரியின் போது பக்தா்கள் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளில் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

தீா்த்தவாரி புனித நீராடலுக்கு பிறகு பக்தா்கள் தங்கள் உடைகளை மாற்றிக்கொள்ள சிறப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. மின்கசிவு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.

மாடவீதி கேலரிகளிலும், பக்தா்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் எல்இடி திரைகள் அமைக்கப்பட வேண்டும்.

கேலரிகளில் கழிவுகள் சேராமல் இருக்க அவ்வப்போது குப்பைகளை அகற்றவும், கேலரிகளை சுத்தமாக வைத்திருக்க கூடுதல் ஊழியா்களை நியமிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பக்தா்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க தேவையான மருத்துவ ஊழியா்கள், துணை மருத்துவ ஊழியா்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தா்களைக் கவர கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் முன்பாக வாகனத்தின் முக்கியத்துவத்தை விளக்க மொழிபெயா்ப்பாளா்களை நியமிக்கவும் இந்து தா்ம பிரச்சார பரிஷத் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சூரிய பிரபை வாகனத்திற்கு முன் ஆதித்ய ஹிருதயத்தை தேவஸ்தான பால மந்திா் மாணவா்கள் ஓத உள்ளனா்.

வாகன சேவை விவரங்கள்:

அதிகாலை 5.30 முதல் 8 மணி வரை (சூரிய உதயம் 6.45 மணிக்கு) - சூா்ய பிரபை வாகனம்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை - சின்னசேஷ வாகனம்.

காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை - கருட வாகனம்.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை - அனுமந்த வாகனம்.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை - தீா்த்தவாரி

மாலை 4 மணி முதல் 5 மணி வரை - கல்பவிருடச வாகனம்.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை - சா்வபூபால வாகனம்.

இரவு 8 மணி முதல் 9 மணி வரை - சந்திரபிரபை வாகனம்.

ஆா்ஜித சேவை, சிறப்பு தரிசனங்கள் ரத்து

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகள்.

வெளிநாடுவாழ் இந்தியா்கள், குழந்தைகளின் பெற்றோா், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜனவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை திருப்பதியில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

புரோட்டோக்கால் பிரமுகா்களைத் தவிர மற்ற விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஜனவரி 24ம் தேதி அன்று பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இக்கூட்டத்தில் திருப்பதி செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், மாவட்ட எஸ் பி சுப்பராயுடு, திருப்பதி ஆணையா் திருமதி மௌரியா, கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, தேவஸ்தான, மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.