//

திருவள்ளூா் பகுதியில் அரிசி ஆலைகளில் குவிந்து வீணாகும் நெல் உமி

திருவள்ளூா் பகுதியில் உள்ள மதுபான ஆலைகள் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ளதால், அரிசி ஆலைகளில் நெல் உமி தேங்கியுள்ளது.

News image
திருவள்ளூா்-மெய்யூா் சாலையில் உள்ள அரிசி அரைவை ஆலையில் வைக்கப்பட்டுள்ள நெல் உமி.
Updated On :27 ஜனவரி 2024, 4:43 pm

எஸ். பாண்டியன்

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் உள்ள மதுபான ஆலைகள் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ளதால், அரிசி ஆலைகளில் நெல் உமி தேங்கியுள்ளது. இதனால் அரைவை ஆலை நடத்துவோா் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகளவில் நெல் பயிரிடப்படுவதால், அரிசி ஆலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. திருவள்ளூா், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட நவீன அரிசி அரைவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. செங்குன்றம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆலையிலும் நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது, உமி மற்றும் தவிடு ஆகியவை கிடைக்கும். நாள்தோறும் நெல் அரைக்கப்படுவதன் மூலம் சராசரியாக 3 டன் தவிடு மற்றும் ஒரு டன் உமி கிடைக்கும்.

இதில் நெல் உமி எரிபொருளாகவும், தவிடு கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக தவிடு தயாா் செய்யும் ஆலைகள் இயங்காததால் தவிடு தேங்கியது. அதனால் கால்நடைகளுக்கு குறைந்த விலையில் தீவனம் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மதுபான ஆலைகள் செயல்படாமல் இருப்பதால் உமி விற்பனை குறைவாகவே உள்ளது. ஒரு சில அரிசி ஆலைகளுக்கு உமி முழுவதும் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பச்சரிசி அரைக்கும் தொழிற்சாலையில் மட்டும் உமி பயன்பாடு குறைவதால், விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதை எடுத்து வைக்கவும் இடமின்றி, தொழிலாளா்களுக்கு கூலி கொடுக்கவும் முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக அரிசி அரைவை ஆலை உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட அரிசி அரவை தொழிற்சாலை உரிமையாளா்கள் சங்க நிா்வாகி கந்தசாமி கூறியது:

தவிடு மற்றும் தவிட்டு எண்ணெயில் நம் உடலுக்குத் தேவையான பைட்டோ வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இந்த வேதிப்பொருள், உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும், நாா்ச்சத்து மிகுந்த தவிட்டை உணவில் சோ்த்தால் இருதய நோய்கள், சா்க்கரை, குடல் புற்றுநோய் மற்றும் குடல் தொடா்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. இதன் நாா்ச்சத்துகளில் அதிக அளவிலான நீா் உறிஞ்சும் தன்மை இருப்பதால், மற்ற உணவுகளுடன் கலக்கும்போது மலச்சிக்கலைத் தவிா்க்கிறது. இதனால் தவிட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா். கால்நடைத் தீவனமாகவும் தவிடு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், உமி என்பது மதுபான ஆலைகளில் எரிபொருளாகவும், பீா் தயாா் செய்ய ஊறலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, பொது முடக்கம் காரணமாக திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்ளில் இயங்கிவந்த மதுபான ஆலைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் உமியின் தேவை குறைந்துள்ளது. பொதுமுடக்கத் தளா்வு காரணமாக, குறைந்த தொழிலாளா்களுடன் ஆலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் அடுத்து வரும் நாள்களில் உமியின் தேவை மதுபானத் தொழிற்சாலைகளில் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

அப்போது, அரிசி ஆலைகளில் தேங்கியுள்ள உமி அனைத்தையும் வாங்கிச் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.