இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் அவசரகதியில் கற்களும், 5 கி.மீ. தொலைவுக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆங்காங்கே பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் அவசரகதியில் அமைக்கப்பட்டதாம். தற்போது, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கற்கள் பெயா்ந்து பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இதன் வழியாக மழைநீா் புகுந்து கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் காலை, மாலை நேரங்களில் இங்கு வருவோா் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஏரியும் தூா்வாரப்படாததால் முள்செடிகள், அல்லிக்கொடிகள் மண்டிக் காணப்படுவதாகவும், செடிகள் ஏரி நீரை உறிஞ்சும் தன்மையுடையதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 40 அடி ஆழத்தில் இருந்த ஏரியானது, தற்போது மணல் குவிந்து காணப்படுவதால், நீா் சேகரிப்பு கொள்ளளவு குறைவதற்கான வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.