சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியில் கடந்த பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் அந்த ஏரி சிறிது சிறிதாக மண் திட்டுகளாக மாறி வருகிறது.
மண் மேடாகி இருப்பதை அகற்றி அதிக அளவில் நீர் தேக்கும் வகையில் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம் சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நீர்த் தேக்கத்தின் உயரம் 35 அடியாகும். இங்கு 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவுக்கு நீர் தேக்கி வைக்க முடியும். இந்த ஏரி 16 கண் மதகுகளைக் கொண்டதாகவும், 70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகவும் உள்ளது.
நீர் ஆதாரம்: இந்த ஏரிக்கு மழை மூலமும், கொசஸ்தலை ஆறு மற்றும் பல்வேறு பிரிவு ஆறுகள் மூலமும் நீர் வரத்து உண்டு. அத்துடன், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரே முக்கிய ஆதாரமாகும்.
இந்த நீரை ஏரியில் சேமித்து வைத்து தேவைப்படும்போது, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ஏரியைச் சுற்றிலும் அம்பேத்கர் நகர், புல்லரம்பாக்கம், சதுரங்க பேட்டை, நெய்வேலி, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துக்கோட்டை, சென்றாம்பாளையம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர் உள்பட 45-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஏரியின் நீர் வரத்து விவசாயக் கிணறுகளுக்கும், இங்குள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போதிய மழையின்றி...: அதோடு இந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கும் சுற்றுலாத் தலமாகவும் இந்த ஏரி திகழ்ந்து வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் போன்ற காரணங்களாலும் பூண்டி ஏரியின் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென குறைந்ததோடு, தற்போது முற்றிலும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் தண்ணீர் திறப்பு என்பது இல்லை.
மண் மேடாக...: தற்போதைய நிலையில் முற்றிலும் நீர் இல்லாத நிலையில் மண் மேடாகிக் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பெய்யும் நீரையும் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஷட்டர் இருக்கும் பகுதி பள்ளமாக இருந்தால்தான் எதிர்திசையில் இருந்து வரும் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியும்.
ஆனால், ஷட்டர் பகுதி மண் மேடாகிக் காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியை தூர்வாரி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 ஆண்டுகளாக..: இது குறித்து சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறுகையில், இந்த ஏரியை தூர்வாரி 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஏரியில் அவ்வப்போது அதிகளவில் நீரை தேக்கி வைக்கும் வகையில் மராமத்து பணிகளைச் செய்ய வேண்டும். அவ்வப்போது, ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறு, சிறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் ஷட்டர்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
இதனால் நீர் தேங்கியிருக்கும் காலங்களில் வீணாக வெளியேறிச் செல்லும் நிலையுள்ளது. எனவே, மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்த காரணத்தால் மண் மேவி காணப்படுகிறது. தற்போது, நீர் முற்றிலும் இல்லாத நிலையில் வடமேற்குப் பருவமழையை எதிர்பார்த்துள்ளனர். அதனால், மழை தொடங்குவதற்கு முன்னதாக ஏரியில் தூர்வாரும் பணியைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தூர்வார நடவடிக்கை: இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஏரியை வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, ஏரி மண்ணை ரூ.6 கோடி அளவில் ஒப்பந்தப் பணிகள் விடுவதற்கு அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்த உடனே பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ், கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, சேதமடைந்துள்ள ஷட்டர்களை ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

