ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் பணி கைவிடப்பட்டதால் ரூ.90 லட்சம் வீண்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் வகையில் முழுமையாக பணி மேற்கொள்ளப்படாததால் இதற்காக ஒதுக்கப்பட்ட அரசுப் பணம் ரூ. 90 லட்சம் வீணானதாக பொதுமக்கள் புகார்

News image
சேதமடைந்துள்ள காக்களூர் ஏரிக்கரை நடைபாதை. 
Updated On :30 ஜனவரி 2024, 4:12 pm

எஸ். பாண்டியன்

திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் வகையில் முழுமையாக பணி மேற்கொள்ளப்படாததால் இதற்காக ஒதுக்கப்பட்ட அரசுப் பணம் ரூ. 90 லட்சம் வீணானதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 
திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் காக்களூர் ஏரி 177.78 ஹெக்டேர் பரப்பளவில் 2,682 மீட்டர் நீளம் வரையிலான 4 மதகுகள் 2 கலங்கல்கள் கொண்ட பெரிய ஏரியாகும். இந்த ஏரி திருவள்ளூர் காக்களூர், ஈக்காடு, கல்யாணகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில் ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் வகையில், இப்பகுதியை தூய்மையாக்கி, மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாகவும், நடைபாதை அமைத்து ஏரியில் படகுப் போக்குவரத்து ஏற்படுத்தவும் வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் கடந்த 2013-இல் சுற்றுலா தலமாக்க முடிவு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இப்பணிகள் மேற்கொள்வதற்காக அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் காக்களூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நமக்கு நாமே திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 
இதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ. 30 லட்சம் திரட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மூலம் அரசு ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஏரிக்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகனங்கள் செல்லும் சாலையோரம் 4 கி.மீ. தொலைவுக்கு நடைபாதை அமைக்கவும், படகு தளம் மற்றும் ஏரியின் மையப் பகுதியில் படகில் இருந்து இறங்கி பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் மேட்டுப் பகுதி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், நடைபாதை பகுதி முழுவதும் இளைப்பாறும் வகையில் இருக்கை வசதிகள், கரையை உடைக்காமல் இருக்க நிழல் தரும் மரவகைகளை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவசரமாக ஏரிக்கரையில் பேவர் கற்கள் பதிக்கப்பட்டன. அதேபோல், இடையிடையே பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் இருக்கைகளும் அவசரமாக அமைக்கப்பட்டதால், தற்போது பேவர் கற்கள் பெயர்ந்து, பெரியளவு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கரைகளிலும் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நடைபாதையும் சேதமடைந்துள்ளது. இதனால் காலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளன. அதேபோல், ஏரியும் பராமரிக்கப்படாததால் அல்லிக் கொடிகள் மற்றும் முள்செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. 
கழிவு நீரால் துர்நாற்றம்
ஏரியின் கரையோரம் மற்றொரு பகுதியில் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தும், ஆவடி சாலையோரத்தில் உள்ள உணவு விடுதிகளில் இருந்தும் கழிவு நீர் திறந்து விடுவதால் இந்த ஏரியில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஏரியில் அடர்த்தியாக அல்லிச் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. அதேபோல், ஏரியில் இருந்த மதகுகள், கலங்கல்கள் இருந்த இடமே இல்லாத நிலையில் உள்ளது. அத்துடன், ஏரியில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம், 100 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படுவதுடன் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது. அதனால், ஏரியை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாத் தலமாக்கி பாதுகாக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் வகையில் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ஏரியை சுற்றிலும் உள்ள கரைகளில் சுற்றுச்சுவர் அமைக்கவும், சுற்றுலாத் துறையுடன் இணைந்து சுற்றுலாத் தலமாக ஆக்கும் வகையில் ரூ. 1 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கியதும் முழுமையாக பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.