குளிர் பதனக் கிடங்கு அமைக்கப்படுமா?
திருவள்ளூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழவகைகள் வீணாவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாத்து, தட்டுப்பாடு ஏற்படும்போதும்,


திருவள்ளூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழவகைகள் வீணாவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாத்து, தட்டுப்பாடு ஏற்படும்போதும், விலை அதிகம் கிடைக்கும் போதும் விற்பனைக்கு அனுப்பும் வகையில் குளிர் பதன சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. இதில் மானாவாரி, ஏரி மற்றும் கிணற்றுப்பாசனம் மூலம் 1.35 லட்சம் ஹெக்டேரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
அதிக அளவில் 60 ஆயிரம் ஹெக்டேர் வரையில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, தானிய பயிர்களான மக்காச்சோளம், கம்பு, சோளம் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சோயா போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன.
அதைத் தொடர்ந்து, தோட்டக்கலைப் பயிர்களான மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள்}காய்கறிகளும், மல்லி, சாமந்தி, கோழிக்கொண்டை பூ உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களும், நறுமணப் பயிர்கள், துளசி என 20 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டத்தில் மா சாகுபடி கடந்த ஆண்டு 12 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நிலையில், நிகழாண்டில் 17 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தென்னை, பலா, வாழை, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, இலந்தை போன்ற பழவகைகள் 8 ஆயிரம் ஹெக்டேரும், கத்தரி, பச்சைமிளகாய், குடைமிளகாய், தக்காளி, கத்தரி, முள்ளங்கி, மரவள்ளி கிழங்கு ஆகியவை 3,866 ஹெக்டேர் பரப்பளவிலும், மலர் வகைகள் 1,536 ஹெக்டேர், நறுமண பயிர்கள் 731 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் மட்டும் கடந்த ஆண்டு 2 லட்சத்து 987 ஆயிரத்து 223 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டன. அதேபோல், நிகழாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரையில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 691 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்வதால் போதிய விலை கிடைக்காத நிலை ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பழவகைகள் மற்றும் காய்கறிகள் அழுகி வீணாகி விடுகின்றன. அதேபோல் மலர் வகைகளும் உரிய விலை கிடைக்காத காரணத்தால் அப்படியே செடியில் விட்டு விடும் சூழ்நிலை உள்ளதாகவும் விவசாயிகள்
கூறுகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க குளிர்பதன சேமிப்புக் கிடங்கு வசதி இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
கிடங்கு வசதி இருந்தால் உபரியாக விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைப் பாதுகாக்க முடியும்.
அத்துடன், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் விவசாயிகள் நஷ்டமடைவதைத் தடுக்க முடியும். அத்துடன், பழ வகைகளை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யவும் முடியும்.
தேவையானபோது மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகவும் தயார் செய்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதுபோன்றவற்றை கருத்தில்கொண்டும், சாகுபடி செய்யப்பட்ட பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்கவும் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாப்பரம்பாக்கத்தைச் சேர்ந்த மா சாகுபடி விவசாயி ராமச்சந்திரன் கூறியது:
இப்பகுதியில் 120 ஏக்கரில் மா சாகுபடி செய்து வருகிறேன். அதேபோல் இந்தக் கிராமங்களில் 2 ஆயிரம் ஹெக்டேர் வரையில் மா சாகுபடி செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கடந்த பருவத்தில் மா சாகுபடி அதிகரித்ததின் காரணமாக விலை குறைந்தது.
இப்பகுதியில் குளிர் பதனக் கிடங்கு வசதி இருந்தால் சேமித்து வைத்து தேவைப்படும் நேரத்தில் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனால் தேவையில்லாத நஷ்டத்தை குறைக்கவும் முடியும். இதுகுறித்து ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்திலும் கடந்த 10 ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, விவசாயிகளின் நிலையை கருத்தில்கொண்டு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியது: தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்குகள் அமைக்கப்படாத மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனியார் பங்களிப்புடன் மா, கத்தரி, தக்காளி, எலுமிச்சை, கீரைவகைகள் என 10 ஆயிரம் மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் குளிர்பதனக் கிடங்கு ரூ.3.50 கோடியிலும், 5 ஆயிரம் மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு அமைக்க ரூ.1.75 கோடியும் வழங்குவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம் என
அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...