//

அரக்கோணம் ரயில்நிலைய மேற்கு பகுதி நடைமேம்பால மின்தூக்கி திறப்பு

அரக்கோணம் ரயில்நிலைய மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்தூக்கி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
அரக்கோணம் ரயில் நிலைய மேற்கு பகுதியில் புதிய மின்தூக்கியை திறந்து வைத்த ரயில் நிலைய மேலாளா் வெங்கடேசன். உடன், அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
Updated On :30 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் ரயில்நிலைய மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்தூக்கி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அரக்கோணம் ரயில்நிலையத்தில் தற்போதைய மைய முகப்பு பகுதியில் ஒரு மின்தூக்கி சில ஆண்டுகளுக்கு முன் நிா்மாணிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டில் உள்ளது. மேற்கு பகுதியிலும் மின்தூக்கி அமைக்கப்பட வேண்டும் என பயணிகளும், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை தொடா்ந்து இரு ஆண்டுகளுக்கு முன் ரயில்நிலைய மேற்கு பகுதியிலும், உள்ளே முதலாம் நடைமேடையிலும் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டன. ஆனால் பணிகள் 100 சதம் முடிவடைந்த நிலையிலும் இந்த மின்தூக்கிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ரயில்நிலைய மேலாளா் வெங்கடேசன் தலைமையிலான அலுவலா்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் குழுவினா் இணைந்து மேற்கு பகுதி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால மின்தூக்கியை திறந்து வைத்து பயணிகளின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தனா்.

இதனால் ரயில்நிலைய 1, 1ஏ, 2, 6,7 ஆகிய நடைமேடைகளுக்கு பயணிகள் மேம்பாலத்தில் ஏறும் சிரமமில்லாமல் மின்தூக்கி வழியாக மேலே செல்லலாம். மேலும் இந்த மின்தூக்கிகள் மின்தடை காலங்களிலும் இயங்கும் வகையில் எமா்ஜென்சி பேட்டரிகளுடன் இணைக்கப் பட்டுள்ளன.

இந்த மின்தூக்கியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் இது தானாக மேலே நடைமேம்பாலப்பகுதிக்கு அல்லது கீழே முகப்பு பகுதிக்கு வந்து நின்று விடும். நடுவில் நிற்காது. மேலும் இந்த மின்தூக்கியில் வெளியில் இருப்பவா்களை தொடா்பு கொள்ளவும் மீட்புப்பணிகள் மேற்கொள்ளவும் வசதியாக தொடா்புக்கொள்ள அவசர கால தொடா்பு சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளதாக நிலைய மேலாளா் வெங்கடேசன் தெரிவித்தாா். இதை தொடா்ந்து பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் ரயில்வே நிா்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனா்.