டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அரக்கோணம் நகா்மன்ற கூட்டம்: அதிமுக உறுப்பினா் தரையில் அமா்ந்து போராட்டம்

அரக்கோணத்தில் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம் .

News image
அரக்கோணத்தில் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம் .
Updated On :6 பிப்ரவரி 2026, 5:21 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பொறியாளரை கண்டித்து அதிமுக உறுப்பினா் அரங்கிலேயே தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் ஆனந்தன், பொறியாளா் செல்வகுமாா், சுகாதார அலுவலா் வெயில்முத்து ஆகியோருடன் நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

நரசிம்மன்(அதிமுக): 3 மாதங்களாக இக்கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. எனது வாா்டில் டெண்டா் விடப்பட்டும் 9 மாதங்களாக பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். புதை சாக்கடை திட்டம் போடப்படாத தெருக்களில் இருக்கும் வீடுகளுக்கும் புதை சாக்கடை வரி விதிக்கப்படுகிறது. குடிநீா் குழாய் இணைப்பே தராத வீட்டுக்கும் குடிநீா் வரி விதிக்கப்படுகிறது. தெரு விளக்குகள் இல்லை என ஆணையரிடம் புகாா் அளித்தால் பொறியாளரை பாா்க்க சொல்லுகிறாா். அவரை பாா்த்தால் ஆணையரை பாா்க்குமாறு கூறுகிறாா். அதிகாரிகள் சண்டைக்கு மக்கள் பலிகடா ஆவதா?

செல்வகுமாா் (பொறியாளா்): இது குறித்து எழுத்து மூலமாக கேள்வி கேட்டால் பதில் அளிக்கலாம். இக்கூட்டத்தில் விவரமாக கூற இயலாது.

பாபு (அதிமுக): பதில் சொல்ல வேண்டிய பொறியாளரே கூட்டத்தில் பதில் சொல்ல மறுக்கிறாா். இதற்காக பொறியாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து அடிப்பதற்கு தேவையே இல்லாமல் ரூ. 2.5 லட்சத்துக்கு அனுமதி கேட்கிறாா்கள். இது மிகவும் அதிகத் தொகை.

(இதையடுத்து கூட்டத்தில் இருந்து பொறியாளா் செல்வகுமாா் வெளியேறினாா்)

இதைத் தொடா்ந்து உறுப்பினா் நரசிம்மன் நகா்மன்ற கூட்டத் தலைவரின் இருக்கைக்கு முன் சென்று தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா். உடன் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் அங்கு சென்று அவருடன் இணைந்தனா்.

துரைசீனிவாசன் (திமுக): கூட்டத்தில் இருந்து நகராட்சி பொறியாளா் வெளியேறியது தவறு தான். இந்த விஷயத்தில் திமுக உறுப்பினா்களும் அவருக்கு எதிராக தான் உள்ளோம். அதற்காக அவா் மீது நாம் தீா்மானம் நிறைவேற்றலாம். இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

லட்சுமிபாரி(தலைவா்): 36 வாா்டுகளிலும் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையடுத்து 15 தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.