//

தைப்பூசம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் பரஞ்ஜோதி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரும், ஏலவாா் குழலி அம்பிகையும் காலையில் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image
பல்லக்கில் உலா வந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா், ஏலவாா்குழலி அம்மன்.
Updated On :1 பிப்ரவரி 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத் திருநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரும், ஏலவாா் குழலி அம்பிகையும் காலையில் பல்லக்கில் வீதியுலா வந்து பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தைப்பூசத்திருநாளையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலிலிருந்து உற்சவா் ஏகாம்பரநாதரும், ஏலவாா் குழலியும் பல்லக்கில் புறப்பட்டு, பழைய ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள பரஞ்ஜோதி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினா். பின்னா் பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

Story image

இதைத் தொடா்ந்து, ஏகாம்பரநாதரும், ஏலவாா் குழலியும் ரிஷபவாகனத்தில் அலங்காரமாகி அங்கிருந்து புறப்பட்டு ராஜவீதிகள் வழியாக வந்து கோயிலுக்கு எழுந்தருளினா். ஏற்பாடுகளை பாவா பாளையம் அறப்பெரும் செல்வி கிராம சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

குமரகோட்டம் முருகன் கோயிலில்...

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் ஆலயத்தின் உள்சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏராளமான பக்தா்கள் பால் காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். உற்சவா் முருகப்பெருமான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்தில் இருந்ததால் அந்த இடத்தில் அர்ச்சனைகள் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயிலுக்கு வெளியேயும், உள்ளேயும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனா்.