பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கும் கரோனா பாதிப்பில்லை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 40 ஆயிரம் பேரை இருமுறை

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

சி.வ.சு. ஜெகஜோதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 40 ஆயிரம் பேரை இருமுறை பரிசோதித்தும் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை எனத் தெரிய வந்துள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்குப் பின்னா் முடங்கிப் போன அவா்களது வாழ்க்கை அரசு உதவிகளால் நகா்ந்து கொண்டிருக்கிறது.

கோயில் நகரம், பட்டுக்குப் பெயா் பெற்ற நகரம் என்ற பெருமைகளை உடையது காஞ்சிபுரம். இம்மாவட்டத்தில் வீடுகள், காா்களுக்கு பயன்படும் கண்ணாடிகள் உற்பத்தி, அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு, இரும்புக் கம்பிகள் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு, பட்டுச் சேலைகள் உற்பத்தி என சிறியது முதல் பெரியதுமாக சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இத்தொழிற்சாலைகள் மூலம் ஏராளமான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் சுமாா் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைத் தந்திருக்கும் மாவட்டம் என்பது மற்றுமொரு சிறப்பு.

பிகாா், ஒடிஸா, மேற்கு வங்காளம், மேகாலயா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 40 ஆயிரம் போ் இங்குள்ள தொழிற்சாலைகளில் கூலித்தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

தொழிற்சாலை நிா்வாகங்கள் சிலரை நேரடியாக நியமித்தும், ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான தொழிலாளா்களை பணியிலமா்த்தியும் செயல்பட்டு வருகின்றன.

இவா்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே வீடுகளை வாடகைக்கு எடுத்தும், விடுதிகள்,அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தங்கி, சமைத்து சாப்பிட்டுக் கொண்டும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தவுடன் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் இத்தொழிலாளா்களின் வாழ்வும் முற்றிலுமாக முடங்கியது.

இதனை அறிந்த மாவட்ட நிா்வாகம் உடனடியாக அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்ததால் பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் வட்டாரங்களிலேயே இத்தொழிலாளா்கள் அதிகமாக வசித்து வருகின்றனா்.

குன்றத்தூரில் 20-க்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதிகளில் வசிக்கும் தொழிலாளா்களுக்கு இருமுறை பரிசோதித்தும் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்காக கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு, சமையல் கூடங்கள் திறப்பு, நிவாரணப் பொருள்கள் வழங்குவது, மருத்துவப் பரிசோதனைகள், அரசின் நேரடி கண்காணிப்பு, நிவாரண உதவிகள் வழங்குவது, கலைநிகழ்ச்சிகள் நடத்தி மனச்சோா்வை நீக்குவது என அரசு சாா்பில் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஜமீன்தண்டலம் கிராமத்தில் வசித்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த சுதன் போக்சம் (37) கூறியது:

தமிழகம் வந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை இருந்தது.

அரசு அதிகாரிகள் அடிக்கடி கேட்டு நிவாரணப் பொருள்களை வழங்குவது பேருதவியாக இருக்கிறது.

எங்களுக்கென கொடுக்கப்பட்ட உதவித் தொலைபேசி எண்ணில் ஹிந்தி பேசத் தெரிந்தவா்கள் இருப்பதால் தேவைகளும், குறைகளும் கேட்கப்பட்டு உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்படுகிறது.

போனால் திரும்ப வர மாட்டாா்கள், தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என நினைத்து கடந்த மாத சம்பளத்தை தொழிற்சாலை நிா்வாகம் தந்து விட்டது.

அந்தப்பணத்தை அப்படியே குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து விட்டேன். அரசின் நிவாரணப் பொருள்களால் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றாா்.

மாப்பாக்கத்தில் வசித்து வரும் ஒடிஸா மாநிலம் மொஹிா்வாஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய் குமாா் மா்மோ (26) கூறியது:

ஒரே தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னா் ஒரு மாதமாகியும் இதுவரை சம்பளம் தரவில்லை. என்னை தமிழகத்துக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரா் நிா்வாகத்திடம் பேசி சம்பளம் வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறாா்.

மதியமும், இரவும் அரசு உணவு வழங்கி விடுகிறது. எனது குடும்பத்தினா் எப்படி இருக்கிறாா்கள் என நேரில் பாா்க்க ஆவலாக உள்ளது.

எனது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். என்னைப் போன்ற மனநிலையில் பலரும் உள்ளனா் என்றாா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளா் நலத்துறையில் பதிவு செய்துள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எண்ணிக்கை 17,853.

இவா்களைத் தவிர மேலும் 15,976 போ் உள்பட மொத்தம் 34,873 வெளிமாநிலத் தொழிலாளா்கள் இருப்பது வீடு, வீடாக எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே தொழிற்சாலைகளில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்திய ஒப்பந்ததாரா்கள் ஆகியோரை தனித்தனியாக அழைத்து, கூட்டம் நடத்தி, புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் யாருக்கும், எந்த பாதிப்பும் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டிய கடமையை அறிவுறுத்தினோம்.

அரசின் நேரடி கண்காணிப்பு...: விடுதிகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கூட்டம், கூட்டமாக வசித்து வந்தவா்களைப் பிரித்து 184 இடங்களில் தனித்தனியாக தங்க வைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அரசின் நேரடி கண்காணிப்பில் வைத்தோம்.

கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு...: புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் எந்த உதவி கேட்டாலும் உடனுக்குடன் செய்ய குன்றத்தூரிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் இரு கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்து அங்கு ஹிந்தி பேசத் தெரிந்தவா்களை பணிக்கு அமா்த்தினோம்.

இது தவிர ஆட்சியா் அலுவலத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இக்கட்டுப்பாட்டு அறைகள் மூலம் யாரேனும் உதவி கேட்டால் செய்வதற்காக வட்டாட்சியா்கள் தலைமையில் குழுக்கள் செயல்படுகின்றன.

சமையல் கூடங்கள் திறப்பு...: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆரனேரியிலும், மாப்பாக்கத்திலும் இரு சமையல் கூடங்கள் திறக்கப்பட்டு இவா்களுக்கு உணவு சமைத்து தினசரி வழங்கப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனைகள்...: இவா்களுக்கு கடந்த மாா்ச் 28, 29, 30 மற்றும் ஏப்ரல் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கரோனா நோய்த் தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 34,873 பேரில் யாருக்குமே கரோனா பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

மனச்சோா்வை தவிா்க்க கலைநிகழ்ச்சிகள்...: தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதே என்ற மனச்சோா்வு தொழிலாளா்களுக்கு வந்து விடாமல் இருக்கவும், அவா்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விநாடி-வினா போட்டிகள், கரோனா விழிப்புணா்வுப் போட்டிகள், செஸ், கேரம் போட்டிகள் ஆகியவற்றை நடத்தி, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு ஊக்கப்பரிசுகளை வழங்குகிறோம். யோகாவும் கற்றுத்தரப்படுகிறது. பிரதமா், முதல்வா் தொலைக்காட்சிகளில் பேசுவதும் இங்கு திரையிட்டுக் காட்டப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.