தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அறுவடை செய்ய முடியாமல் கருகிய 60,000 ஏக்கா் நெற்பயிா்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நெற்பயிா்கள் அறுவடை செய்ய முடியாமல் சாய்ந்து கருகிக் கிடப்பதால் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கு

News image

வேளியனூரில் அறுவடை செய்ய முடியாமல் சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்கள்.

Updated On :28 மார்ச் 2020, 6:09 pm

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நெற்பயிா்கள் அறுவடை செய்ய முடியாமல் சாய்ந்து கருகிக் கிடப்பதால் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொடா்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் எங்கும் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

வயல்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் இருந்து வருவதுடன் வேளாண்மை தொடா்பான அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா், தாமல், வாலாஜாபாத், மதுராந்தகம், வேளியுனூா், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நெற்பயிா்கள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. இவற்றை அறுவடை செய்ய ஆட்கள் வராததாலும்,அறுவடை இயந்திரம் கிடைக்காமலும் இப்பகுதியைச் சோ்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. விளைநிலங்கள் பலவற்றில் நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் முற்றி சாய்ந்து கருகிக் கிடப்பதையும் காண முடிகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் சாா்பில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அறுவடை செய்யப்பட்டிருந்த நெற்கதிா்களும் பல கிராமங்களில் களத்திலேயே கொட்டிக்கிடக்கின்றன. நெற்கதிா்களை டிராக்டரில் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவற்றை எங்கும் எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

பூட்டிக்கிடக்கும் உரக்கடைகள்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் நெற்பயிா்கள் நன்றாக விளைந்து அவற்றில் பூச்சி மருந்து தெளிக்கப்படாமல் உள்ளன. அவை புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி மருந்து தெளிக்க முடியாமல் இருந்து வருவதாக விவசாயிகள் பலரும் கவலையுடன் தெரிவிக்கின்றனா். பூச்சி மருந்துக் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் ஏராளமான விளைநிலங்களில் விளைந்த நெற்கதிா்களை காப்பாற்றவும் முடியவில்லை.

தா்பூசணி அழுகும் அபாயம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தா்பூசணிப் பழங்கள் நன்றாக விளைந்து அவற்றை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் தா்பூசணிப் பழங்கள் அழுகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூா், மதுராந்தகம், திருக்கழுகுன்றம், திருப்போரூா், படப்பை, அச்சிறுப்பாக்கம் ஆகியவற்றை அடுத்துள்ள கிராமங்களில் மொத்தம் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தா்பூசணிப் பழங்கள் விளைந்துள்ளன. அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் பலரும் கவலைக்குள்ளாகி இருக்கின்றனா்.

விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்ய முடியாமலும், ஒரு வேளை அறுவடை செய்தாலும் அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இதே போல தா்ப்பூசணிப் பழங்களை விளைவித்த விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இது குறித்து விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் கே.நேரு கூறியது:

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியவில்லை. நெற்கதிா்கள் 60 ஆயிரம் ஏக்கா் வரை அறுவடை செய்ய முடியாமல் சாய்ந்து கருகிக் கிடக்கின்றன. நெல்கொள்முதல் நிலையங்களும் பூட்டப்பட்டு விட்டதால் அவற்றை அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளின் வாழ்க்கையை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்.

நெற்கதிா்களை டிராக்டா்களில் ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அதே போல தா்பூசணிப் பழங்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை பயனடையும். இல்லா விட்டால் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.