மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விவசாயிகளுக்கு இனிக்காத கரும்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்து வரும் கரும்பு விவசாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் படாளத்தில் உள்ள கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய கோடிக்கணக்கான தொகையை பல மாதங்களாகத் தராமல் இருப்பதால்

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 6:48 pm

காஞ்சிபுரம் மாவட்டம் படாளத்தில் உள்ள கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய கோடிக்கணக்கான தொகையை பல மாதங்களாகத் தராமல் இருப்பதால் ஆண்டுக்கு ஆண்டு கரும்பு  விவசாயம்  குறைந்து  வருவதாக  விவசாயிகள் கவலையுடன்  புகார்  தெரிவித்தனர். 
படாளத்தில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், திருக்கழுகுன்றம்,   உத்தரமேரூர்,செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரம்  உள்பட பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் சர்க்கரை ஆலையின் தேவைக்கேற்ப கரும்புகளை வழங்கி வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து தேவையான கரும்புகளைப் பெற்றுக் கொள்ளும் ஆலை நிர்வாகம் அக்கரும்புகளுக்கான தொகையை வெட்டிய நாளிலிருந்து 15 நாள்களுக்குள் தந்து விட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் ஆலை நிர்வாகமோ தொடர்ந்து 7 மாதங்களாக கரும்பு விவசாயிகளுக்கான தொகையை வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் அவ் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 
கூட்டுறவு வங்கிகளில் கரும்பு விவசாயத்தை நம்பி கடன் வாங்கியவர்கள் அக்கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளும் விவசாயிகளுக்கு கடனை உடனடியாக செலுத்துமாறும்,இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருக்கிறது.
விவசாயிகளுக்குத் தர வேண்டிய தொகையை ஆலை நிர்வாகம் தராமல் இருந்து வரும் சூழ்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக வங்கிகள் அனுப்பியிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. பல விவசாயிகள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.ஆண்டுக்கு  ஆண்டு கரும்பு விவசாயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்து கொண்டே வருவதாகவும் விவசாயிகள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலரான கே.நேரு கூறியது.
கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலை டன் ஒன்றுக்கு ரூ.2612,  ஊக்கத்தொகை ரூ.200 ஆகிய  இரண்டும் விவசாயிகளுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 7 மாதங்களாக வழங்கப்படவே இல்லை. கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் அதற்கான  தொகை  வழங்கப்பட வேண்டும்  என்ற  விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் ரூ.9 கோடி வரை விவசாயிகளுக்கு தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு அரசு அறிவித்தபடி ரூ.450 வீதம் கூடுதல் விலையாகத் தர வேண்டிய தொகை ரூ.15 கோடியையையும் தராமல் ஆலை நிர்வாகம் பாக்கி வைத்திருக்கிறது.இப்பணத்தையும் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்குத் தராமல் அவர்களை ஏமாற்றி வருகிறது.இதே போல விவசாயிகள் தொடர்ந்து வஞ்சித்து வருவதால் ஆண்டுக்கு ஆண்டு கரும்பு விவசாயம் குறைந்து கொண்டே இருக்கிறது. 2018-ஆம் ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். இந்த ஆண்டு 7 ஆயிரம் விவசாயிகள் 2450 ஹெக்டேர் மட்டுமே கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்யவில்லை.சாகுபடிப் பரப்பும் குறைந்துவிட்டது.
கடன் வாங்கிய விவசாயிகள் பணம் சர்க்கரை ஆலையில் உள்ள நிலுவையில் உள்ளதால் கடனுக்கான வட்டித்தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகமே கட்ட வேண்டும். படாளம் சர்க்கரை ஆலையில் சுமார் 2 லட்சம் சர்க்கரை மூட்டைகளும், சர்க்கரை  தயாரிப்புக்குத்  தேவையான  மொலாசஸ், பகாஸ் ஆகியன இருப்பில் இருந்தும் அவற்றை விற்பனை செய்து பாக்கித் தொகையை செலுத்தி விவசாயிகளை காப்பாற்றலாம்.ஆனால் என்ன காரணத்தாலோ ஆலை நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுக்க மறுக்கிறது. இதை விடக் மற்றொரு முக்கியமான விஷயம்  என்னவென்றால்  ஆலை நிர்வாகம் கடந்த சில மாதங்களாக கரும்புகளை பாண்டிச்சேரியிலிருந்து வாங்கத் தொடங்கியிருக்கிறது.
சர்க்கரை ஆலையின் நடவடிக்கைகள் குறித்தும், கரும்பு விவசாயிகளின் நிலை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த பலனும் இல்லை.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டமும் நடத்தினோம்.போராட்டத்தை கைவிடுமாறும், உடனடியாக பணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசின் சார்பில் உறுதியளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. 
வங்கிகளில் நகைக் கடன், விவசாயக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கிய விவசாயிகள் அவற்றைக் கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டு சொல்ல முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
கரும்பு விவசாயத்தின் மூலம் மக்களுக்கு  இனிப்புச் சுவையை வழங்கும் விவசாயிகளின் வாழ்வு கசந்து போய் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் விடிவு காலம் வரும் என்று கவலையுடன் காத்திருக்கிறார்கள் கரும்பு விவசாயிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.