மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புதர்மண்டி செயல்படாத சுகாதார நிலையம்

பல கோடி மதிப்புள்ள இடத்தை சுகாதாரத்துறைக்குக் கொடுத்ததால் அங்கு கட்டப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது புதர்மண்டி செயல்படாமல்

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 10:55 pm


பல கோடி மதிப்புள்ள இடத்தை சுகாதாரத்துறைக்குக் கொடுத்ததால் அங்கு கட்டப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது புதர்மண்டி செயல்படாமல் உள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ வசதிக்காகக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 திம்மராஜம்பேட்டையில் சுகாதார நிலையம் கட்ட இடம் தருமாறு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் பல கோடி மதிப்புள்ள  இடத்தை அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு வழங்கியிருக்கிறார்கள்.  
அந்த இடத்தில் சுகாதார நிலையம் கட்டப்பட்டு மிகச் சிறப்பாக  செயல்பட்டு  வந்துள்ளது. தினமும் சுமார் 70 முதல் 90 பேர் புற நோயாளிகளாக வந்து சென்றுள்ளனர்.  இந்த சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும் 3 செவிலியர்களும் பணியில் இருந்துள்ளனர்.
 சில ஆண்டுகளுக்குப் பிறகு  கட்டடத்தில் பழுது ஏற்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.  மருத்துவரும் செவிலியர்களுமே வராததால்  கடந்த பல ஆண்டுகளாகவே  முட்புதர்கள்  மண்டி  பாழடைந்த  கட்டடமாகப் பாழ்பட்டுப் போனது இந்த சுகாதார நிலையம். 
  24 மணி நேரமும் செயல்பட்டு வந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையம்,  திம்மராஜம் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல்வேறு  கிராம மக்களின் பிரசவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இச்சுகாதார நிலையம் இருந்து வந்துள்ளது.  
  கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் கட்டடம் இடிந்து விழும் நிலையிலும்,  கட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் புல்,  புதர்கள் மண்டி சுகாதார நிலையத்துக்கு அருகில் செல்லவே மக்கள் அஞ்சும் வகையில்  உள்ளது.  இந்நிலையம் செயல்படாததால் சுமார் 7 கி.மீ.தூரத்தில் உள்ள வாலாஜாபாத் அல்லது ஐயம்பேட்டையில் உள்ள சுகாதார நிலையத்துக்குச்  செல்ல வேண்டிய நிலை உள்ளது.  
 பிரசவம், விஷக்கடி உள்பட எந்த அவசர மருத்துவ உதவிக்கும் 7 கி.மீ.தூரம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டியது இருப்பதால் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது. 
 தொடர்ந்து 20 ஆண்டுகளாக இந்த நிலைமை நீடித்து வருவதாகவும், மீண்டும்  ஆரம்ப சுகாதார நிலையத்தைச் செயல்படுத்துமாறும்  பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் திம்மராஜம்பேட்டை கிராம மக்கள்.
 இப்போது இந்த நிலையத்தில் ஒரு செவிலியர் மட்டும் பணியில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவரும் திம்மராஜம்பேட்டைக்கு வருவதில்லையாம்.
இது தொடர்பாக திம்மராஜம்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர்  ஆர்.அமுதா  கூறியது:  
காஞ்சிபுரத்திலிருந்து  செங்கல்பட்டு  செல்லும்  பிரதான சாலையில் 44 அடி அகலம், 220 அடி நீளத்தில் கிராமத்துக்குச் சொந்தமான  பலகோடி மதிப்புள்ள இடத்தை கிராமத்தில் சுகாதார நிலையம் கட்டுவதற்காக தீர்மானமாக நிறைவேற்றி தானமாக வழங்கினோம். அதற்கான பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன.
 1957 ஆம் ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் பிறகு  அந்த இடத்தில் அரசின் சார்பில் சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு இப்பகுதி மக்கள் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்த நிலையில் கட்டடம் பழைமையடைந்து இடிந்து விழும் நிலைக்கு மாறியதால் பணியாளர்கள் யாரும் இங்கு வரவில்லை. தற்போது 20 ஆண்டுகளாக கிராமத்துக்கு சுகாதார நிலையம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
திம்மராஜம்பேட்டையை சுற்றியுள்ள வில்லிவலம், தாங்கி, பூசிவாக்கம்,  பாவாசாகிப்பேட்டை, கிதிரிப்பேட்டை, நெய்க் குப்பம், வெங்குடி, கீழ்ஒட்டிவாக்கம், சீயமங்கலம் உள்ளிட்ட  கிராமங்களில்  வ சிக்கும்  சுமார்  50 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்  இப்போது  அவசர  மருத்துவத்  தேவைகளுக்குக்  கூட  சுமார்  7 கி.மீ.தூரம்  செல்ல  வேண்டியதுள்ளது.  
உடனடியாக  மீண்டும்  ஆரம்ப சுகாதார நிலையத்தைச் செயல்படுத்துமாறு பல முறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்த போது நிதி இல்லாமல் இருப்பதால் கட்ட முடியவில்லை என்கிறார்கள்.
பல கோடி மதிப்புள்ள  சொத்தை தானமாக வழங்கிய கிராமத்தினரின் நலன் கருதி உடனடியாக சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.