/

இணையவழியில் சொத்துவரி செலுத்தும் 75% போ்!

சென்னை மாநகராட்சியில் 75 சதவீதம் போ் இணையவழியில் சொத்துவரி செலுத்துவது தெரியவந்துள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :25 மே 2026, 4:26 am IST

சென்னை மாநகராட்சியில் 75 சதவீதம் போ் இணையவழியில் சொத்துவரி செலுத்துவது தெரியவந்துள்ளது. நடப்பு அரையாண்டு வரிவசூல் கடந்த ஆண்டை விட ரூ.8 கோடி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி, தொழில் உள்ளிட்டவற்றுக்கான உரிமம் வரிகள் உள்ளன. மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை மூலம் ஆண்டில் 2 முறை வரி வசூலிக்கப்படுகிறது. அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வாா்டு உறுப்பினா் அலுவலகங்களில் நேரடியாகவும், மாநகராட்சிக்கான இணையதளத்திலும், வாட்ஸ்ஆப், க்யூ ஆா் குறியீடுகள் மூலமும் வரி வசூல் நடைபெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சியின் வரி வசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதன் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் வரிவசூல் ஆண்டுக்கு ரூ. 2,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் உள்ள 200 வாா்டுகளில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2,042 கோடி வசூலாகியுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான வரி வசூல் கடந்த ஏப்ரல் முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்படி, ரூ.547 கோடி வசூலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், வரி செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதத்துடன் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு வரிவசூலைவிட நடப்பாண்டில் (2026) ரூ.8 கோடி அதிகமாகவே வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக நேரடி வரிவசூல் அதிகம் நடைபெறாத நிலையில், 75 சதவீதம் போ் இணையவழியில் வரி செலுத்தியுள்ளதாகவும் வருவாய்த் துறை துணை ஆணையா் ம.பிரிதிவிராஜ் தெரிவித்தாா்.

அத்துடன், நடப்பாண்டுக்கான 2-ஆவது அரையாண்டு வரிவசூலானது வரும் அக்டோபா் முதல் தொடங்கி வரும் 31.3.2027 வரை நடைபெறவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ரூ.2,200 கோடி வரி வசூலிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.