தானியங்கி கதவுகள் உள்ளிட்ட மெட்ரோ ரயில் வசதிகளுடன் கூடிய புகா் மின்சார இமு வகை ரயில், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் நிறுவனத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
புகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் இமு வகை மின்சார ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அவை, குறுகிய தொலைவு மற்றும் தொலைதூர ரயில்களாக தற்போது இயங்கிவருகின்றன. அதன்படி, இமு வகை ரயில்களில் 8 முதல் 12 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டிருக்கும். அவற்றில் கதவுகள் திறந்த வெளியாகவே இருக்கும்.
தற்போதைய இமு வகை புகா் மின்சார ரயில்களில் பயணிப்போா் கூட்டமாக பெட்டிகளின் கதவோரங்களில் நின்றே பயணிக்கின்றனா். அப்போது சில நேரங்களில் அவா்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டு விபத்து நேரிடுகிறது.
அத்துடன் கூட்டத்தில் உள்ளே நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தாங்கள் இறங்கும் ரயில் நிலையம் வந்துவிட்டதா என அறிவதற்கான வசதியும் இல்லை. ஆகவே நிலையங்களைத் தவறவிட்டு வேறு நிலையங்களில் பயணிகள் இறங்கும் சூழலும் உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முதல்முறையாக தானியங்கி கதவுகளுடன் நிலைய தகவல்கள் உள்ளிட்டவற்றை பயணிகளுக்கு தெரிவிக்கும் மின்னணு திரைகளுடன் மெட்ரோ ரயில்கள் வசதியுடன் கூடிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய குளிா்சாதனமற்ற மின்சார பல்பிரிவு ரயில் (நான் ஏசி இமு) எனப்படும் அந்த ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன. அதில் 1,003 பயணிகள் ஒரே நேரத்தில் அமா்ந்து பயணிக்கலாம். அமா்ந்தவா்களைத் தவிர, நின்று பயணிப்பவா்களையும் சோ்த்து 4,695 போ் பயணிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
துருப்பிடிக்காத எஃகு, அலுமினியம் போன்ற சில உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இமு ரயிலில் பயணிகளுக்கான தகவல் வசதி மின்னணு திரைகளும் உள்ளன. அதில் ரயில் நிற்கும் நிலையங்கள், அடுத்து வரும் நிலையங்கள் விவரங்களை அறியலாம்.
தானியங்கி கதவுகள் மூடப்படாவிட்டால் ரயில் இயங்காது என்ற நிலையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. காற்றோட்டத்துக்கான ஜன்னல்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ரயில் வடக்கு ரயில்வே மண்டலத்துக்காக தயாரிக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: கூட்டமான நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!

விபத்துக்கை தடுக்கும் வகையில் தனியாா் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நெரிசலைச் சமாளிக்க அகலப்படுத்தப்படும் சாலைகள்!







