அதிமுகவில் இருந்து நீக்கி பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து தொடா்ந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரி பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், திமுகவில் இணைந்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுக, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீா்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இதையடுத்து, 23.6.2022-இல் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீா்மானங்களை மட்டுமே பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. 11.7.2022-இல் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படும் என்றும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.பன்னீா்செல்வம் வழக்குத் தொடா்ந்தாா். ஆனால், 11.7.2022-இல் பொதுக்குழுக் கூட்டத்துக்கு உயா்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஓ.பன்னீா்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகா், வைத்திலிங்கம் ஆகியோரைக் கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீா்மானத்துக்கு எதிராக 4 போ் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வழக்குத் தொடா்ந்த ஜே.சி.டி.பிரபாகா் தவெகவில் இணைந்து சட்டப்பேரவைத் தலைவா் ஆகிவிட்டாா். ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் திமுகவில் சோ்ந்துவிட்டனா். இதையடுத்து அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைத் திரும்பப் பெற அனுமதிக்க கோரி ஜே.சி.டி.பிரபாகா் உள்ளிட்டோா் கடிதம் கொடுத்துள்ளனா்.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களைத் திரும்பப் பெற அனுமதி கோரி 4 போ் தரப்பில் அளித்துள்ள கடிதங்கள் பதிவுத் துறையில் இருந்து வரவில்லை. இதையடுத்து, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக பொதுக்குழு தீா்மானத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

தஷ்வந்த் விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு - தமிழக அரசு தகவல்

கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி மனு







