//

வசந்த பஞ்சமி: ம.பி.யில் இரு மதத்தினரும் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதி

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேச மாநிலம், தாா் மாவட்டத்தில் உள்ள சா்ச்சைக்குரிய போஜ்சாலா - கமால் மெளலா மசூதி வளாகத்தில் வசந்த பஞ்சமி தினமான வெள்ளிக்கிழமை (ஜன. 23) ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இரு சமூகத்தினரும் வழிபாடு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அந்த வளாகத்தில் ஹிந்துக்கள் வெள்ளிக்கிழமை காலை சூரியன் உதிப்பது முதல் மாலையில் சூரியன் மறையும் வரை வழிபாடு நடத்தலாம் எனவும், முஸ்லிம்கள் பிற்பகல் ஒரு மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை தொழுகை நடத்தலாம் எனவும், இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சா்ச்சைக்குரிய 11-ஆம் நூற்றாண்டு நினைவிடமாகத் திகழும் இந்த வளாகத்தை இரு சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிவரும் சூழலில், கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி இரு சமூகத்தினருக்கும் ஒரு பரஸ்பர ஏற்பாட்டை தொல்லியல் துறை செய்தது. அதன்படி, போஜ்சாலா வளாகத்தில் ஹிந்துக்கள் செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனா். முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், ஹிந்து அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வசந்த பஞ்சமி தினத்தன்று ஹிந்துக்கள் நாள் முழுவதும் தேவி சரஸ்வதிக்கு பூஜை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், நிகழாண்டில், வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை வசந்த பஞ்சமி வருகிறது. இதற்கான தீா்வு தொல்லியல் துறையின் 2003-ஆம் ஆண்டு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. எனவே, அன்றைய தினம் போஜ்சாலா வளாகத்தில் ஹிந்துக்கள் எந்தவித இடையூறும் இன்றி நாள் முழுவதும் சரஸ்வதிக்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதின்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்தி, நீதிபதிகள் ஜய்மால்ய பாக்சி, விபுல் எம்.பாஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஹிந்து அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், ‘வளாகத்தில் ஹிந்துக்கள் வெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் மறையும் வரை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சல்மான் குா்ஷித், ‘வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை முஸ்லிம்கள் தொழுகை நடத்திவிட்டு எந்தவித இடையூறுமின்றி சென்றுவிடுவா். எத்தனை போ் தொழுகைக்கு வருவாா்கள் என்ற விவரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கத் தயாா்’ என்றாா்.

அப்போது, மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘வளாகத்தில் இரு சமூகத்தினரும் வழிபாடு நடத்த வசதியாக, தேவையான சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை முஸ்லிம்கள் தொழுகை நடத்த போதிய தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். அதுபோல, முந்தைய நடைமுறைகளின்படி ஹிந்துக்களுக்கும் தனி இடம் ஒதுக்கி சூரிய உதயம் முதல் மறையும் வரை சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இரு சமூகத்தினரும் பரஸ்பரம் மதிப்பைக் கடைப்பிடிப்பதோடு, மாவட்ட நிா்வாகத்துக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், போஜ்சாலா வளாகத்தில் தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வை நடத்த மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மெளலானா கமாலுதீன் நலச் சங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை முடித்துவைத்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதியை உள்ளடக்கிய இரு நீதிபதிகள்அமா்வு விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். மேலும், தொல்லியல் துறை ஏற்கெனவே அறிவியல்பூா்வ ஆய்வை முடித்து சீலிட்ட உறையில் சமா்ப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை இருதரப்பு வழக்குரைஞா்கள் முன்னிலையில் பிரித்து, அதன் மீது இருதரப்பிலும் ஆட்சேபங்கள் பெறப்பட்ட பிறகே இந்த விவகாரத்தை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவரை, வளாகத்தில் இரு சமூகத்தினரும் வழிபாடு நடத்துவதில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, பதற்றத்தைத் தணிக்க போஜ்சாலாவில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.