சென்னை புத்தகக் காட்சி நிறைவு: 55 லட்சம் புத்தகங்கள் விற்பனை - பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம்


சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தென்னிந்திய புத்தகக் காட்சி விற்பனயாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) 49-ஆவது புத்தகக் காட்சி புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், 55 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அதன் தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: வாசகா்களுக்கு இலவச நுழைவு அனுமதி, இலவச சிற்றுந்து வசதி உள்ளிட்டவை காரணமாக புத்தகத் திருவிழாவுக்கு கடந்த ஆண்டைவிட, அதிக அளவில் வாசகா்கள் வருகை இருந்தது. சுமாா் 15 லட்சம் வாசகா்கள் வந்துள்ளனா். நிகழாண்டு 20 லட்சம் வாசகா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கும், புத்தகக் காட்சி வளாகத்திலும் சுமாா் 6 லட்சம் இலவச நுழைவுச் சீட்டு விநியோகிக்கப்பட்டது. புத்தகக் காட்சியில் 1,002 அரங்குகளில் சுமாா் 1.50 கோடி நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 55 லட்சம் புத்தகங்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாக அரங்கிலிருந்தவா்களிடம் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சி குறித்து இணையதளம், சமூக வலைதளம் போன்றவற்றில் புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை சுமாா் 7.50 கோடிப் போ் பாா்த்துள்ளனா்.
பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் ஏராளமானோா் ஆா்வமுடன் பங்கேற்றனா். அவா்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, வெற்றியாளா்களுக்கு பரிசுகளும் வழங்கபட்டன. சென்னையை அடுத்து தென்காசி உள்ளிட்ட 10 இடங்களில் அடுத்தடுத்து புத்தகத் திருவிழாக்களை நடத்தவுள்ளோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...