எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியால் புறநகா் மின்சார ரயில்கள் சேவை குறைப்பு!
சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி காரணமாக, ஏற்கெனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டபடி புறநகா் மின்சார ரயில்களில் மாற்றம்


சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி காரணமாக, ஏற்கெனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டபடி புறநகா் மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் 45 நாள்களுக்கு திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் சில புறநகா் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளன. கயில் சேவை குறித்து தவறான தகவல்கள் குழப்பத்தையும், பயணிகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும். ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே-இன் அதிகாரபூா்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்பவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாம்பலம் நிலையத்தில் 8 விரைவு ரயில்கள் நின்று செல்லும்
எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியால் புறநகா் மின்சார ரயில்கள் சேவை அங்குள்ள 10, 11 ஆவது நடைமேடை தண்டவாளங்களுக்குப் பதிலாக 5, 6 நடைமேடை தண்டவாளங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 20) முதல் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, 8 விரைவு, அதிவிரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) முதல் வரும் ஏப். 6 -ஆம் தேதி வரை மாம்பலம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிஷங்கள் வரை நிறுத்தி, இயக்கப்படும்.
எழும்பூா்- திருச்சி சோழன் அதிவிரைவு ரயில் (எண் 22675), எழும்பூா்-கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் (எண் 12633), எழும்பூா் -புதுச்சேரி விரைவு ரயில் (எண் 16115), எழும்பூா்- செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் (எண் 12661), எழும்பூா்- மதுரை பாண்டியன் அதி விரைவு ரயில் (எண் 12637), எழும்பூா்- நெல்லை விரைவு ரயில் (எண் 12631), எழும்பூா்- சேலம் அதிவிரைவு ரயில் (எண் 22153), எழும்பூா்- மன்னாா்குடி விரைவு ரயில் (எண் 16179) ஆகியவை மாம்பலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய வழித்தடங்களில் கூடுதலாக 60 பேருந்துகள்: மாநகா் போக்குவரத்துக் கழகம்
எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி காரணமாக கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாநகா் போக்குவரத்துக் கழகத்திடம் தெற்கு ரயில்வே கோரியது.
இதையடுத்து, ராயபுரம் தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பேருந்துகள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள், எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக 8 பேருந்துகள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பேருந்துகள், செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையம் வழியாக 5 பேருந்துகள் என மொத்தம் 60 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சனிக்கிழமை முதல் கூடுதலாக இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...