//

மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்தது தொடர்பாக..

News image
சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா
Updated On :18 பிப்ரவரி 2026, 7:43 am

இணையதளச் செய்திப் பிரிவு

மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 2026-2027- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் ஆர்.பிரியா இன்று(பிப். 18) தாக்கல் செய்தார்.

சென்னை மாநகராட்சியின் 2025-2026 -ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 2025 மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வரி வருவாய் ரூ.5,145.52 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடியாகவும் இருந்தது. மூலதன வரவாக ரூ.3,121.65 கோடியும், மூலதனச் செலவாக ரூ.3,190.61 கோடியும் காட்டப்பட்டது. மொத்த வரவினங்கள் வருவாயாக ரூ.8,267.17 கோடியும், மொத்த செலவினங்களாக ரூ.8,404.70 கோடியும் காட்டப்பட்டது.

இந்த நிலையில், நிகழ் நிதியாண்டுக்கான (2026-2027) சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று (புதன்கிழமை) மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா தாக்கல் செய்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பட்ஜெட் உரையில் தெரிவித்ததாவது:

சென்னை கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை திட்டம் கொண்டுவரப்படும். பொது - தனியார் பங்களிப்பு முறையில் ரோப் கார் சேவை தொடங்கப்படும்.

சென்னையில் 20 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கோடைக்காலங்களில் குளிர்ச்சியான மோர் வழங்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். பசுமை பரப்பை அதிகரிக்க ரூ. 10 கோடியில் பசுமை சென்னை திட்டம் கொண்டுவரப்படும்.

சென்னையில் 50 இடங்களில் மயான பூமிகளை மேம்படுத்தும் திட்டம் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மண்டலம் 1 முதல் 15 வரை சுகார மையங்களில் பணிபுரியும் 750 செவிலியர்கள், களப்பணியாளர்களுக்கு டேப்லெட் கணினிகள் வழங்கப்படும்.

ரூ. 10 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சியின் முக்கிய சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்படும். ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பொது இடங்களி்ல் வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்.

வீடில்லாதவர்களுக்கு ரூ.12 கோடியில் தற்காலிக தங்குமிடங்கள் (கன்டெய்னர் கொள்கலன் வீடுகள்) அமைக்கப்படும். ரூ. 40 கோடி மதிப்பிட்டில் பன்முக ஒருங்கிணைப்பு போக்குவரத்து மையங்கள் அமைக்கப்படும்” என்றார்,

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் பிப். 20 ஆம் தேதி மீண்டும் மாமன்றக் கூட்டம் கூடி நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Mayor Priya has announced in the Chennai Corporation budget that a rope car service will be launched on the beach at Marina.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.