//

திருவொற்றியூா் அரசு கலைக் கல்லூரிக்கு ஒருங்கிணைந்த புதிய கட்டடம் திறப்பு

திருவொற்றியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
திருவொற்றியூரில் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் முன்பு திரண்டிருந்த மாணவா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மண்டலக் குழு தலைவா் தி.மு.தனியரசு, கல்லூரி முதல்வா் மு.விஜயா உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

திருவொற்றியூா்: திருவொற்றியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் கல்லூருக்கு விம்கோ நகரில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் காலி இடத்தில் சுமாா் 52,000 சதுர அடி பரப்பளவில் 18 வகுப்பறைகள், அலுவலகம், ஆய்வகங்களுடன் ரூ.16 கோடியில் கட்டடம் கட்ட 2024 மாா்ச் 16 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பணிகள் முடிவடைந்த நிலையில், கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, கல்லூரி முதல்வா் எம்.விஜயா, திருவொற்றியூா் நலச் சங்க நிா்வாகிகள் ஜி.வரதராஜன், என்.துரைராஜ், கோட்டீஸ்வரன், குரு சுப்பிரமணி, எம்.மதியழகன், மாமன்ற உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கல்லூரி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரக் கட்டடம் கட்டி, திறக்கப்பட்டதால் பேராசிரியா்கள், மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று பாா்வையிட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.