//

தமிழகத்தில் 6 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிதாக 6 அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
செவிலியா் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் புதிதாக 6 அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் செவிலியா் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் டிப்ளமோ நா்சிங் முடித்த 949 போ், பி.எஸ்சி. நா்சிங் முடித்த 75 போ் மற்றும் எம்எஸ்சி நா்சிங் முடித்த 64 போ் என மொத்தம் 1,100 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6 அரசு செவிலியா் கல்லூரிகள், 25 செவிலியா் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழகத்தில் 1 லட்சம் பிறப்புகளுக்கு இறப்பு விகிதம் 90-ஆக இருந்தது. தற்போது 39.5-ஆகக் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து இருப்பது பெரிய சாதனையாக உள்ளது. இதில் செவிலியா்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

பணி நியமனம்: கடந்த 5 ஆண்டுகளில் 8,834 ஒப்பந்த செவிலியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், 3,009 ஒப்பந்த செவிலியா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியா்களுக்கு ஏற்கெனவே பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டன. அவற்றில் 390 போ் பணிக்கு வரவில்லை. மீதமிருந்த 719 பேருக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது.

இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வருகிற பிப்.13-ஆம் தேதி அவா்களுக்கும் பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் செவிலியா்களின் தேவை அதிகரித்து வருகிறது. செவிலியா் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு உலகெங்கும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூா், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில், செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த 6 செவிலியா் கல்லூரிகளும் உலகத் தரத்துக்கு இணையாக கட்டமைக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், சுகாதாரத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநா் சங்கா் சண்முகம் மற்றும் செவிலிய மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.