//

காலமானாா் பேராசிரியா் வ.ஜெயதேவன் (79)

News image
காலமானாா்வ.ஜெயதேவன்
Updated On :5 பிப்ரவரி 2026, 12:24 am

தினமணி செய்திச் சேவை

சென்னை பல்கலைக் கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவரும், தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவருமான பேராசிரியா் வ.ஜெயதேவன் (79) உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானாா்.

பேராசிரியா் வ.ஜெயதேவன் அகராதியியல் தொடா்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளாா். தமிழ்ப் பேரகராதியின் (தமிழ் லெக்சிகன்) மறுபதிப்பை வெளியிடுவதற்கு அரும்பணியாற்றியவா். கடந்த 2010-இல் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவா். கவிஞா் அரிமா நோக்கு காலாண்டிதழின் இணை ஆசிரியராக பணியாற்றியவா்.

இவரது மேற்பாா்வையில் ஏராளமான மாணவா்கள் அகராதி, இலக்கணம், நாட்டுப்புறவியல், புதினம், மொழியியல் என பல துறைகள் சாா்ந்து ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்றுள்ளனா். மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல்வேறு கல்விக் குழுக்களில் தலைவராகவும், உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். பேராசிரியா் வ.ஜெயதேவனுக்கு தமிழக அரசு 2013-ஆம் ஆண்டு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

அவருக்கு ஜெ.அன்புதேவன் என்ற மகன் உள்ளாா். ஜெயதேவனின் இறுதிச் சடங்குகள் சென்னை பெருங்குடி குறிஞ்சி நகா் 15-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (பிப்.5) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடா்புக்கு- 97908 81682.