ஆவடி: இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய திருவேற்காடு பேருந்து நிலையத்தால் பயணிகள், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு நகராட்சி, தமிழக தலைநகர் சென்னையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நகராட்சியில் உள்ள திருவேற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி உள்ளிட்ட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 72 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், இந்த பேருந்து நிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் திரியும் இடமாகவும் மாறிவிட்டதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியது: இந்தப் பேருந்து நிலையம் உள்ள பகுதி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மேய்க்கால் புறம்போக்கு நிலமாகும். அதனை இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், திருவேற்காடு பகுதியில் இருந்து சென்னை பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து ஒன்றும் இந்த விளையாட்டு மைதானத்தை, நிறுத்துமிடமாக பயன்படுத்தி வந்தது. ஆகவே, 1978-ஆம் ஆண்டு அப்போதைய திருவேற்காடு ஊராட்சி நிர்வாகத்தின் சிறப்பு தீர்மானம் மூலம் மேய்க்கால் புறம்போக்கு நிலப்பகுதி பேருந்து நிலையமாக உருமாறியது.
இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு பேரூராட்சியாக இருந்த போது, இந்த பேருந்து நிலையம் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல் திருவேற்காடு பேருந்து நிலையத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பராமரித்து வருகிறது. இந்தச் சூழலில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் போதிய நிதியில்லாததால், திருவேற்காடு பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் திரியும் இடமாகவும் மாறி வருகிறது.
இதனால், பயணிகள் மட்டுமல்லாமல், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், சிறு அளவிலான கழிப்பறை, பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மா உணவகம் செயல்படுவதால் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை நாள்தோறும் தூய்மைப்படுத்தி வருவதோடு, ஒரு நெகிழியாலான குடிநீர் தொட்டியை வைத்துள்ளது.
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பின் கீழ், இந்த பேருந்து நிலையம் வந்தால், நகராட்சி நிதியின் மூலம் மின் விளக்கு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் மாடுகளை பேருந்து நிலையத்தினுள் நுழையாமல் கண்காணிக்கவும் முடியும். எனவே, அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து திருவேற்காடு பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்றனர்.
இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘திருவேற்காடு பேருந்து நிலையம் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹூண்டாய் - டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு!

2026ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த வாகன விற்பனை 2.83 கோடி: சியாம்

கேட்பாறின்றி... குப்பை போன்று குவிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

