கல்லூரி மாணவர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் ரூட் தல மாணவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளின் வழித்தடங்களின் அடிப்படையில் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், போலீஸார் கண்காணிப்பு குறைந்ததும் மீண்டும் மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே இப்படிப்பட்ட மோதல்களில் ஈடுபடுகின்றனர். 2 ஏ, 6டி, 6இ 59, 159, 15, 15டி, 15ஜி, 24 ஏ, 24 சி, 25சி, 27பி, 27 எச், 29ஏ, 29இ, 40ஏ, 53, 153 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளிலேயே மோதல்கள் நடைபெறுகின்றன. இதில் 6 வழித்தடங்களில் வரும் மாணவர்களிடமே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. முக்கியமாக, இந்தப் பேருந்துகளில் ரூட் தல என்ற அழைக்கப்படும் மாணவர்களால் ஏற்படும் முன்விரோதத்தின் காரணமாக, பெரும்பாலான தகராறுகள், மோதல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ரூட் தல மாணவர்கள்: கல்லூரிகளில் அரசுப் பேருந்துகளில் வரும் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தலைவராகச் செயல்படும் மாணவர்தான் ரூட் தல என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வழித் தடத்துக்கும் ஒரு ரூட் தல மாணவர் உண்டு. இந்த மாணவர்களின் உத்தரவுப்படியே, பேருந்தில் பயணிக்கும் பிற மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பது எழுதப்படாத உத்தரவு. அவரது உத்தரவை மதிக்காத பட்சத்தில் அங்கு மோதல் நடந்தேறுகிறது.
அதேவேளையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் வரும் ரூட் தல மாணவர்களிடம் யார் பெரியவர் என்று காட்டிக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக அவர்கள், பேருந்து தினம் என்ற பெயரில் அடாவடி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது, பேருந்தின் மேற்கூரையில் ஏறி நடனமாடுவது, பேருந்துகளில் பாட்டுப்பாடி நடனமாடுவது, பயணிகளை கீழே இறக்கிவிட்டு பேருந்தை கடத்திச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதில் அவர்கள், எல்லையைத் தாண்டும்போது மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறே கடந்த 23 -ஆம் தேதி அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் சாலையில் மோதிக் கொண்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கல்லூரி மாணவர்கள் மீது மென்மையான போக்கையும், நடவடிக்கையும் எடுத்து வந்த சென்னை காவல்துறை, அரும்பாக்கம் சம்பவத்துக்கு பின்னர் விழித்துக் கொண்டது. மாணவர்களின் மோதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முக்கியமாக மோதலுக்கு காரணமான சுமார் 90 ரூட் தல மாணவர்களை கண்டறிந்து, அவர்களிடம் குற்ற விசாரணைமுறைச் சட்டத்தின் படி 6 மாதங்களுக்கு எவ்வித தவறுகளிலும் ஈடுபடமாட்டோம், மீறி ஈடுபட்டால் கைது செய்து, சிறையில் அடைக்கலாம் என உறுதிமொழிப் பத்திரம் பெற்றனர்.
முன்னாள் ரூட் தல மாணவர்கள்: இதற்கு அடுத்தப்படியாக, ரூட் தல மாணவர்கள் ஏதேனும் தகராறில் ஈடுபட்டால் அது குறித்த புகார்களை உடனடியாக பெறுவதற்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண்ணை காவல்துறை அறிவித்தது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரமாக அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் அமைதியாக கல்லூரிக்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.
இதன் அடுத்தக் கட்டமாக, கடந்த ஆண்டுகளில் ரூட் தல மாணவர்களாக இருந்தவர்களைக் கொண்டு கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு ரூட் தல மாணவர்களாக இருந்து மோதலில் ஈடுபட்டு காவல்துறையினரால் வழக்குப் பதியப்பட்டு, இப்போது சரியான வேலை கிடைக்காமல், சிரமப்பட்டு கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். இதில் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்களை மாணவர்கள் மத்தியில் பேச வைப்பதற்குரிய நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி: இது தொடர்பாக சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தது: மாணவர்களிடையே மீண்டும் மோதல் வரக் கூடாது என்பதற்காக சட்டரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சட்ட அமலாக்கத்தின் மூலமாக மட்டும் மாணவர்களைக் கட்டுப்படுத்தி, இந்த மோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது.
பொது இடங்களில் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாலும், தகராறில் ஈடுபடுவதினாலும் கல்லூரி வாழ்க்கை முடிந்த பின்னர் ஒரு மாணவர் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறார், அவரது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்கின்ற புரிதலையும், விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த காலங்களில் ரூட் தல மாணவர்கள் எனக் கூறிக் கொண்டு பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, இப்போது சரியான வேலை கிடைக்காமல், தங்களது வாழ்க்கையை நடத்த எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அவர்களே நிகழ்ச்சி வாயிலாக, கல்லூரி மாணவர்களிடம் பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்கள், தாங்கள் கல்லூரி பருவத்தில் செய்யும் தவறுகளால் எதிர்காலத்தில் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.