டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

பண மோசடிக் கும்பலுக்கு மறைமுகமாக உதவும் வங்கிகள்!

செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களை தவறாகப் பயன்படுத்தி,

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

கே.வாசுதேவன்

செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களை தவறாகப் பயன்படுத்தி, வட மாநிலக் கும்பல் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுத சென்னை பெருநகரக் காவல் துறை முடிவு செய்துள்ளது.
 தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது தொடர்புடைய குற்றங்களும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதில், வங்கி பண அட்டை, கடன் அட்டை சார்ந்த குற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்தக் குற்றங்கள் மூலமாக அதிக அளவில் பணம் மோசடி செய்யப்படுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
 வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்தும், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்தும் பேசுவதுபோல சில நபர்கள், வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் பேசுகின்றனர். அந்த அழைப்பில் பேசும் நபர், கடன் அட்டையின் கடன் வரம்பை உயர்த்துவதாகவோ அல்லது பரிசுப் புள்ளிகள் (ரிவார்டு பாயின்ட்) வழங்குவதாகவோ அல்லது புகைப்படத்துடன் புதிய அட்டை வழங்குவதாகவோ, கடன் அட்டையின் தரத்தை உயர்த்துவதாகவோ கூறுவார்.
 இதைக் கேட்கும் நபர், உண்மையிலேயே அந்த அழைப்பில் பேசும் நபர் வங்கியில் இருந்துதான் பேசுகிறார் என நம்புவார். அப்போது அந்த நபர், ஏ.டி.எம். பண அட்டை உள் நுழைவு ரகசிய எண், 16 இலக்க எண்கள், சிவிவி எண்கள், இணையப் பரிவர்த்தனைக்கான உள்நுழைவு ரகசிய எண், ஒரு முறையே பயன்படுத்தும் உள்நுழைவு ரகசிய எண் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வார்.
 ரகசியத் தகவல்களை அந்த நபர்களிடம் கூறிய சிறிது நேரத்தில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருக்கும் அனைத்துப் பணமும் இணையப் பரிவர்த்தனை மூலம் நூதனமாகத் திருடப்படும்.
 இந்த வகை மோசடியால், கடந்த ஓராண்டில் சென்னையில் இரு வங்கிகளில் கணக்கு வைத்திருந்த சுமார் 800 பேர் ஒரு கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
 இதனிடையில், இத்தகைய மோசடியில் ஈடுபட்டதாக உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த ஒரு கும்பலையும், ஹரியாணா மாநிலம், கர்னாலைச் சேர்ந்த ஒரு கும்பலையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
 தாரை வார்க்கப்படும் தகவல்கள்: இந்த வழக்குகளில் வங்கி வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் மோசடிக் கும்பலுக்கு எப்படிக் கிடைக்கின்றன என்ற கோணத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது.
 அதாவது, வங்கி வாடிக்கையாளர்கள் பற்றிய ரகசியத் தகவல்களை, சில செல்லிடப்பேசி நிறுவனத்தினரும், அவர்களின் முகவர்களும் தங்களது தொழில் வளர்ச்சிக்காக வங்கிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு வாங்குகின்றனர்.
 இந்தத் தகவல்களைப் பெறும் செல்லிடப்பேசி நிறுவனத்தினர், வங்கி வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு சிம்கார்டு விற்பனை, தங்களின் சேவைத் திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்துகின்றனர். அதேநேரத்தில், செல்லிடப்பேசி நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் தங்களுக்குக் கிடைத்த வங்கி வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை மோசடிக் கும்பலிடமும் வழங்குகின்றனர்.
 அல்லது செல்லிடப்பேசி நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபரே நேரடியாக இந்த மோசடியில் ஈடுபடுகிறார்.
 நொய்டா, கர்னால் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட இரு கும்பல்களிலும், செல்லிடப்பேசி நிறுவனங்களிடமிருந்து மோசடி நபர்களுக்கு தகவலை பெற்றுக் கொடுத்தவரே வழக்கின் முக்கிய எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
 ரிசர்வ் வங்கிக்கு கடிதம்: இந்த வகை மோசடியில், வங்கிகளிடமிருந்து செல்லிடப்பேசி நிறுவனங்கள் தகவல்களைப் பெறுவதற்கு எந்த விதிமுறையோ, கட்டுப்பாடோ இல்லாமல் இருப்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று வெளிப் பணி ஒப்படைப்பு மூலம் அவர்களைத் தொடர்பு கொள்கின்றன. இதனால் வங்கி வாடிக்கையாளர்களை பற்றிய ரகசியத் தகவல்கள் எளிதில் மோசடிக் கும்பலிடம் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல் துறையினர் கருதுகின்றனர்.
 இதையடுத்து, தங்களது வாடிக்கையாளர்கள் பற்றிய ரகசியத் தகவல்களை செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கோ அல்லது பிற தனியார் நிறுவனங்களுக்கோ வங்கிகள் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுத காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகரக் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறியதாவது:
 இந்த மோசடியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக உள்ள சட்டங்களை ஆராய்ந்து வருகிறோம். அதேவேளையில், வாடிக்கையாளர்கள் பற்றிய ரகசியத் தகவல்களை வழங்குவது தனிமனித சுதந்திரத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்பதையும் ரிசர்வ் வங்கியிடம் எடுத்துக் கூற உள்ளோம்.
 எனவே, வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை அவர்களது அனுமதியில்லாமல் யாருக்கும் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டால், இத்தகைய மோசடி நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.