டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐ.டி. ஊழியர்களுக்கு ஆலோசனை:உளவியல் நிபுணர்கள் வழங்குகின்றனர்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு (ஐ.டி.) உளவியல் நிபுணர்கள் ஆலோசனை (கவுன்சலிங்) வழங்குகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:54 am

கே.வாசுதேவன்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு (ஐ.டி.) உளவியல் நிபுணர்கள் ஆலோசனை (கவுன்சலிங்) வழங்குகின்றனர்.

சென்னையில் பெய்த பலத்த மழையினால் கடந்த 1-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால், நகரே வெள்ளத்தில் மிதந்தது. மாநகரின் ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து, பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. முக்கியமாக அடையாறு, கூவம், பக்கிஹாம் கால்வாய், ஏரிகள் ஆகியவற்றின் கரைப் பகுதிகளில் இருக்கும் இடங்கள் வெள்ளத்தில் பல நாள்கள் சிக்கிக் கொண்டன.

நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட இந்தப் பெரு வெள்ளத்தின் காரணமாக, சென்னையில் தொழில் துறை மட்டுமன்றி, தகவல் தொழில்நுட்பத் துறையும் மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப மையமாக உள்ள துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, சிறுசேரி, தரமணி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், ராமாபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும் அந்த வாரம் முழுவதும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள சுமார் 50 பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் வெள்ளத்தில் சில நிறுவனங்கள் சிக்கிக் கொண்டன. அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்களை தீயணைப்புப் படை வீரர்களும், மீட்புப் படையினரும் மீட்டனர். இதன் விளைவாக, டிசம்பர் முதல் வாரம் முழுவதும் பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் படிப்படியாகச் செயல்படத் தொடங்கின. இருப்பினும், இன்று வரை சில நிறுவனங்கள் செயல்படாத முடியாத நிலையில் உள்ளன.

சில நிறுவனங்கள் பெங்களூரு, ஹைதராபாத், நொய்டா ஆகிய நகரங்களுக்கு தங்களது ஊழியர்களைத் தாற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்து, பணிகளை மேற்கொள்கிறது. இருப்பினும், டிசம்பர் முதல் வாரத்தில் ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, அந்தத் துறைக்கு ரூ.250 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆலோசனை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பின்னர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே திறக்கப்பட்டாலும், பல நிறுவனங்களில் முழு அளவில் ஊழியர்கள் வருகை இன்னும் இல்லையாம். அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து முழுமையான அளவில் பணித்திறனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து நேரிடையாகப் பணித்திறனை அதிகரிக்கச் செய்வதற்குரிய சூழ்நிலையும் அங்கு இல்லை.

அதேவேளையில், ஏற்கெனவே ஏற்பட்ட தொழில் இழப்பை ஈடுகட்டி, இருக்கிற வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டிய நிலை ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சென்னையில் சில முக்கியமான பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகளை உளவியல் நிபுணர்கள் மூலம் கடந்த ஒரு வாரமாகக் கொடுத்து வருகிறது.

இதற்காக, அந்த நிறுவனங்களில் தாற்காலிகமாக உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு திட்ட மேலாளர் தலைமையில், அந்தத் திட்டத்தில் கீழ் பணிபுரியும் ஊழியர்களைச் சந்தித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகள் அளித்து வருகின்றனர். இந்த ஆலோசனைகளை இன்னும் ஒரு வாரத்துக்கு வழங்குவதற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதன்மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதோடு, அவர்களிடமிருந்து முழு அளவில் பணித்திறனையும் பெற முடியும் என்பதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இதற்கு அந்த நிறுவன ஊழியர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.