செம்மரக்கட்டை கடத்தல் மையமாகத் திகழும் சென்னை துறைமுகம்
செம்மரக்கட்டை கடத்தலின் மையமாக சென்னை துறைமுகம் செயல்படுவது தெரியவந்துள்ளது.


செம்மரக்கட்டை கடத்தலின் மையமாக சென்னை துறைமுகம் செயல்படுவது தெரியவந்துள்ளது.
ஆந்திரம்,கர்நாடகம்,தமிழகம்,கேரளம் ஆகிய மாநிலங்களின் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 5,200 கிலோ மீட்டர் பரப்பளவு காடுகளில் இருக்கும் செம்மரங்களுக்கு உலகளவில் அதிக மதிப்பு உள்ளது. இந்தக் காடுகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் செம்மரக்கட்டைகள் ஜப்பான்,சிங்கப்பூர்,மியான்மர்,சீனா,கொரிய நாடுகள்,அரபு நாடுகள் ஆகியவற்றில் பல கோடிக்கு விற்கப்படுகின்றன.
இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் செம்மரக்கட்டை கடத்தல் தொழில் வேகமாக வளர்ந்துள்ளது. செம்மரத்தை வெட்டுவதற்கும்,விற்பனை செய்வதற்கும் அரசு தடை விதித்துள்ள நிலையில், கடத்தல்காரர்களால் அப்பாவி தொழிலாளர்களிடம் பணத்தாசை காட்டி செம்மரக்கட்டையை எளிதாக வெட்டிக் கடத்துகின்றனர்.
செம்மரக் கடத்தலை தடுப்பதற்கு அண்மைக் காலமாக ஆந்திர அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 14,800 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரத்தில், இதுவரை மரத்தை காடுகளில் வெட்டி சாலைக்குக் கொண்டு வரும் தொழிலாளர்களை ஆந்திர அரசு கைது செய்துள்ளதே தவிர, ஒரு முறை கூட கடத்தலுக்கு மூளையாகச் செயல்படும் நபர்களைக் கைது செய்யவில்லை.
செம்மரக்கட்டை கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இதுவரை சேஷாசல மலைப் பகுதியில் மட்டும் இதுவரை 35 தொழிலாளர்களை என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்தாண்டு 917 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அம் மாநில காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அதேவேளையில், கடத்தலில் ஈடுபடும் கும்பல், காடுகளில் வெட்டி கொண்டு வரப்படும் செம்மரக்கட்டையை, மிகவும் சாமர்த்தியமாக கடத்துகிறது. இந்தக் கும்பல் தங்களது கடத்தல் தொழிலுக்குச் சாதகமான துறைமுகங்களைத் தேர்வு செய்துள்ளது. இதற்காக சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, கண்ட்லா ஆகிய துறைமுகங்களை கடத்தல் கும்பல் பயன்படுத்துகிறது. இந்த துறைமுகங்களின் வழியாகவே 95 சதவீத செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை துறைமுகத்தில் அதிகம்: சென்னை துறைமுகம் வழியாகவே அதிகமான செம்மரக்கட்டை கடத்தப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிற துறைமுகங்களைக் காட்டிலும் இந்த துறைமுகத்துக்கு செல்வது எளிது, கண்காணிப்பு குறைவு, செம்மரக்கட்டைகளை பதுக்கி வைப்பதற்கான வாய்ப்பு போன்ற காரணங்களால் இந்த துறைமுகம் கடத்தல்காரர்களின் முதல் தேர்வாக உள்ளது.
மேலும் இரு மாநில அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், செம்மரக்கட்டைகளை ஆந்திர வனப் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கடத்துவதற்கு என சென்னையில் பல கும்பல் உருவாகியுள்ளன. இந்தக் கும்பல் ஆந்திர வனப் பகுதியில் இருந்து சென்னை துறைமுகம் வரை கொண்டுவருவதற்கு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு வேலை செய்கிறது. அதேபோல செம்மரக்கட்டைகளை பதுக்கி வைப்பதற்கும் மறைமுக கிட்டங்கிகள் செங்குன்றம், புழல், மாதவரம், திருவொற்றியூர், எண்ணூர், பூக்கடை புளியந்தோப்பு ஆகியப் பகுதிகளில் செயல்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவ்வப்போது வாகனச் சோதனை மூலம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அவை மிக சிறிய அளவே என்று சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவிக்கிறார். ஏனெனில் கடத்தப்படும் செம்மரக்கட்டைகளில் 10 சதவீதமே பறிமுதல் செய்யப்படுவதாகவும், 90 சதவீதம் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்தப் பிரச்னையில் ஆந்திர, தமிழக காவல்துறை இணைந்து செயல்படாத வரை செம்மரக்கட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலையை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் நடவடிக்கையாக கடத்தலில் மூளையாகச் செயல்படுகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வயிற்று பிழைப்புக்காக மரம் வெட்டும் தொழிலாளர்களை சுட்டுக் கொல்வதினால் கடத்தலை கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் கூறினார்.
5 கட்டங்களாக கடத்தப்படும் செம்மரக்கட்டை
செம்மரக்கட்டை கடத்தல் 5 கட்டங்களாக நடைபெறுவதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபடும் கும்பல், நேரடியாக காடுகளுக்கு செல்வதோ அல்லது கடத்தலில் ஈடுபடுவதோ கிடையாது. மரத்தை வெட்டுவதில் தொடங்கி வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கும் வரை அனைத்து வேலைகளையும் மூன்றாவது நபர் மூலமே செய்கின்றனர்.
இதனால் அவர்கள் காவல்துறை கண்காணிப்பில் இருந்து விலகி இருப்பதோடு, தொடர்ச்சியாக இந்தக் கடத்தலில் எவ்வித பிரச்னையும் இன்றி ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடத்தலை 5 கட்டங்களாக கடத்தல்காரர்கள் செயல்படுத்துகின்றனர்.
முதல் கட்டத்தில், கடத்தல்காரர்கள் தொழிலதிபர்களிடம் செம்மரக்கட்டை வெட்டி கடத்துவதற்கு பணம் பெறுகின்றனர். இரண்டாவது கட்டத்தில் தரகர்கள் மூலம் மரம்வெட்டும் தொழிலாளர்கள் மூலம் செம்மரம் வெட்டப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில் வெட்டப்படும் மரம் தரகர்களால் நியமிக்கப்பட்ட நபர்கள் மூலம் துறைமுகத்துக்கோ அல்லது கிட்டங்கிக்கோ கொண்டு வரப்படுகிறது. நான்காவது கட்டத்தில் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. ஐந்தாவது கட்டத்தில் சம்பந்தப்பட்டவரிடம் செம்மரக்கட்டை ஒப்படைக்கப்படுகிறது.
இதில் மரத்தை வெட்டி கொண்டு வரும் தொழிலாளர்களிடம் சில ஆயிரங்களுக்கு வாங்கப்படும் மரம், 4 நிலைகளைத் தாண்டி வாடிக்கையாளர் கையில் சேரும்போது, அதன் மதிப்பு பல கோடிகளைத் தொடுகிறது.
இறந்தால் ரூ. ஒரு லட்சம் இழப்பீடு
செம்மரக்கட்டைகளை வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள் இறந்தால் ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என கடத்தல் கும்பலால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டை வெட்டி கடத்துவதற்காக திருவண்ணாமலை, வேலூர்,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏழைத் தொழிலாளர்கள் கடத்தல் கும்பலால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் அழைத்துச் செல்லப்படும், கடத்தல் கும்பல் தொழிலாளர்களிடம் செம்மரக்கட்டை கடத்தலின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இறக்க நேரிட்டால், அவர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்குவதாக உத்தரவாதம் வழங்குகிறதாம்.
இந்த தகவலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் நடத்திய கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் இறந்துவிட்டால், கடத்தல் கும்பல் பணம் வழங்காமல் ஏமாற்றுவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...