பூண்டி ஏரியின் உபரி நீரை சேமிக்க புதிய தடுப்பணை
பூண்டி ஏரியின் உபரி நீரை சேமிக்க புதிய தடுப்பணை


பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க, திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணை, அடுத்த வடகிழக்குப் பருவ மழைக்குள் தயாராகிவிடும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரி நிரம்பும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் விடப்படுகிறது.
அந்த ஆற்றின் வழித்தடமான தாமரைப்பாக்கம் மற்றும் வல்லூரில் இரண்டு அணைகள் உள்ளன. இவை இரண்டும் நிரம்பும் பட்சத்தில் வெளியேற்றப்படும் உபரி நீரானது கத்திவாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு இரண்டு அணைகளுக்கும் நடுவே தடுப்பணை ஒன்று கட்டப்படும் என்று கடந்த நிதியாண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
160 மில்லியன் கனஅடி நீர் தேக்கம்: தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து 8.7 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணையின் மூலம் சுமார் 160 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.
175 மீட்டர் அகலம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பணையின் இரு ஓரங்களிலும் மண் மற்றும் கசடுகளை வெளியேற்றும் 6 ஷட்டர்கள் கட்டப்பட உள்ளன.
நிலத்தடி நீர் உயரும்: இந்த தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு, நீரைத் தேக்கி வைக்கப்படும் பட்சத்தில் அப்பகுதிக்கு அருகில் உள்ள பெருமுடிவாக்கம், அத்தங்கிகாவனூர், குன்னப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1.5 கிலோ மீட்டர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருக்கண்டலம் பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் நடைபெற்று வருகிறது. திருக்கண்டலத்துக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் இருளிப்பட்டு என்ற இடத்திலும் சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
25 சதவீதப் பணிகள் நிறைவு: திருக்கண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, 9 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் வரவேற்பு: இந்த திட்டத்துக்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதால், தற்போது அங்கு மல்லிகைப் பூ செடிகள்தான் அதிகம் பயிரிடப்படுகின்றன. தடுப்பணை கட்டப்பட்டு, நீர் தேக்கி வைக்கப்படும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் விவசாயிகள் நெல் பயிரிட சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...