சென்னை காவல்துறை பட்டியலில் 120 ரௌடிகள்
சென்னை பெருநகர காவல்துறை ரௌடி பட்டியலை தயாரித்துள்ளது. இப் பட்டியலில் 120 ரௌடிகள் இடம்


சென்னை பெருநகர காவல்துறை ரௌடி பட்டியலை தயாரித்துள்ளது. இப் பட்டியலில் 120 ரௌடிகள் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் அண்மைக்காலமாக ரௌடிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரௌடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வட சென்னையில் ரௌடிகள் கோஷ்டியாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் கடந்த மாதம் அடிக்கடி நடைபெற்றன. இந்த மோதலில் 5 கொலைச் சம்பவங்களும் நடந்தன. முன் விரோதத்தின் காரணமாக இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாக காவல்துறை கூறிக் கொண்டாலும், ரௌடிகளின் நடவடிக்கை கடந்த காலங்களை விட அதிகரித்துவிட்டதையே இது காட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் ரௌடிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியாக வைத்துக் கொண்டு, அதன்பேரில் கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சூழ்நிலையை, காவல்துறை அதிகாரிகள் தங்களது கடுமையான நடவடிக்கையின் மூலம் மாற்றினர். இதன் பின்னர் ரௌடிகளும் போலீஸாரின் கடுமையான நடவடிக்கைக்கு பயந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடாமல் அடக்கமாக இருந்து வந்தனர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல்துறையினர் ரௌடிகள் மீது பெரியளவில் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவால் இப்போது ரௌடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது என ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ரௌடிகள் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டார். அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸார், குற்றப்பிரிவு போலீஸார், நுன்ணறிவுப் பிரிவு போலீஸார் ஆகியோர் இணைந்து சென்னையில் இருக்கும் ரௌடிகள், அவர்களின் செயல்பாடு, அவர்களின் பின்புலம், அவர்கள் மீதுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற தகவல்களை திரட்டி முழுமையான ஒரு பட்டியலை தயார் செய்துள்ளனர்.
இந்தப் பட்டியல் மூலம் பல புதியத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. முக்கியமாக இதில் கடந்த காலங்களைக் காட்டிலும் ரௌடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் ரௌடிகளாக சென்னையில் தஞ்சம் புகுந்திருப்பதும் தெரியவந்துள்ளதாம்.
120 ரௌடிகள்: மேலும் மயிலாப்பூர் பெரியசேகர், தேனாம்பேட்டை சி.டி. மணி, தாம்பரம் சிசீங்ராஜா, தொப்புளான் குமார், அரும்பாக்கம் சீனு, குன்றத்தூர் வைரம், வியாசர்பாடி ஆற்காடு சுரேஷ், மயிலாப்பூர் நிர்மல், வளசரவாக்கம் கல்வெட்டு ரவி, வியாசர்பாடி பொக்கை ரவி,பெரிய மகேஷ் ஆகிய 12 பேரின் தலைமையில் ரௌடிகள் கோஷ்டிகளாக இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார். இதில் ஒவ்வொரு கும்பலிலும் 8 பேரில் இருந்து 9 பேர் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை முழுவதும் 120 ரௌடிகள் இருப்பதாக அந்த பட்டியலில் தெரியவந்துள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ரௌடிகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர்களுக்கு ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக ரௌடிகள் மீது நிலுவையிலுள்ள புகார்களை கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.
அதேவேளையில் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமைறைவாக இருக்கும் ரௌடிகளையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, அதற்கான விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ரௌடிகளுக்கு தண்டனை கிடைப்பதோடு, அவர்கள் மூலம் வரும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...